தஞ்சாவூர்: பொன்னியின் செல்வன் படம் பார்த்தவங்களுக்கு வந்திய தேவன் என்ற பெயர் மறக்கவே மறக்காது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்திருந்த கேரக்டர்தான். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் அமைந்திருந்த ஒரு பாத்திரப்படைப்பு.


இந்தப் படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ் இருப்பாங்க. அதை எல்லாம் தாண்டி வந்தியதேவன் அனைவரையும் கவர்ந்து இழுத்து இருப்பார். அட யார் இந்த வந்திய தேவன் கற்பனை கதாபாத்திரம் தானே என்று நினைத்து இருப்பீர்கள். ரொம்பவே நம்ம மனசுல நின்ன ஒரு கதாபாத்திரம்தான் இந்த வல்லவராயன் வந்திய தேவன். இவருக்கு உருவம் கொடுத்த சிலை எங்கு இருக்கு என்று தெரியுங்களா?

அட ஆமாங்க வந்திய தேவனின் கற்பனை கதாபாத்திரத்திற்கு உருவம் கொடுத்த சிலை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இருக்கு. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  உள்ள பசுபதிகோயில் என்ற கிராமத்தில் மிகவும் பழமையான புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஆலந்தூர் புள்ளமங்கை கோயிலில்தான் இந்த அற்புதமான வந்தியதேவன் கதாபாத்திர படைப்பிற்கு உருவம் கொடுத்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் பராந்தக சோழன் கட்டிய இந்த கோயில் அற்புதமான கட்டிட கலையுடனும், மெய் சிலிர்க்க வைக்கும் சிலை வடிவமைப்புடனும் நிறைந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்று. சுமார் 1100 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது.





திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வர என்று பெயர். இந்த கோயிலில் தான் யார் கண்ணுக்கும் படாத வகையில் கோபுர விமானம் ஒன்றில் சற்றே அமைதியாக,  ஓரமாக உள்ள அழகாக, சூப்பராக ஸ்டைலா நிற்கும் சிலைதான் வந்திய தேவனாக உருவகப்படுத்தப்பட்டது. வாணர்குல வீரன், வல்லவராயன் வந்திய தேவன் செம கெத்தா நின்னுட்டு இருக்கார். இந்த சிலைதான் வந்தியதேவனுக்கு உயிர் கொடுத்த சிலை என்றால் மிகையில்லை.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் பொன்னியின் செல்வன் படைப்பிற்காக  ஓவியங்களை உருவாக்க அமரர் கல்கியும், ஓவியர் மணியம்செல்வன் ஆகிய இருவரும் பல இடங்களை சுற்றி வரும்போது இந்த கோவிலில் அழகிய கம்பீரமாக இருந்த இந்த சிலையை பார்த்து மயங்கி இந்த சிற்பத்தையே மணியம்செல்வன் ஓவியமாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
 
இன்னும் கொஞ்சம் உற்று பார்த்தா தோள்ல உள்ள வடத்தை கம்பீரமா புடிச்சுகிட்டு நிற்கும் இந்த சிற்பம் யாரோ எவரோ தெரியாது. ஆனால் ‌வரலாற்று சிறப்புமிக்க காவியத்தின் கதாநாயகனா மாறிட்டாரு அப்படிங்கறது ஒரு பயங்கரமான ஆச்சரியம் தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. .

இது போன்ற பல அழகான சிற்பங்கள் இந்த கோவிலில் இருக்கிறது. சிற்பம் மட்டும் இல்லாமல் இந்த கோயிலில் 21 கல்வெட்டுகள் இருக்கிறது.