தஞ்சாவூர்: அடி தூள் விடுமுறைக்கு கிடைச்சாச்சு ஒரு பீச் என்று மனம் குதூகலிக்க தஞ்சை மாவட்ட சட்டென்று பட்ஜெட்டோட ஒரு இடத்தை தேர்வு செய்தால் அது புதுப்பட்டினம் பீச்தான். இந்த பீச்சில் அடிப்படை வசதிகள் செய்து தந்தால் சிறந்த சுற்றுலாத்தலமாக மாறும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
என்னது தஞ்சாவூருல பீச்- அப்படின்னு கேள்வியே கேட்க வேண்டாம். இருக்கு. சென்னைக்கு ஒரு மெரினான்னா... தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம்தான். அட ஆமாங்க. தஞ்சாவூரின் பீச்ன்னு எல்லோரும் பெருமையாக காலரை தூக்கி விட்டுக்கலாம். எல்லாம் சரிதான் ஆனால் இந்த பீச்சுல அடிப்படை வசதிகள் செய்து கொரிக்க, தின்ன என்று சின்ன சின்ன கடைகள் ஏற்படுத்தினா சூப்பரான பீச்சுன்னு பெருமை கொடி கட்டலாம்.
 
சரிங்க இந்த புதுப்பட்டினம் பீச் எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்... நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக பரவசப்படுத்தும் வங்க கடலின் கடற்கரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 27 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் இருக்கு. அப்போ தஞ்சாவூர் பீச்... இதோ சொல்றோம்ங்க.


மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைப் பகுதிதான் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறது. அடடா... என்ன ஒரு அமைதி. மனசு லேசாகுது. டென்ஷன் காணாமல் போகுது. சுற்றி உள்ள தென்னந்தோப்பின் நிழலும், கடற்காற்றின் தாலாட்டும், 2 கி.மீ தொலைவுக்கு வெள்ளை வெளேர் என்ற மணற்பரப்பும் இது நம்ம ஊரு “கோவா”ங்கோ என்று மனசை கொள்ளை கொள்கிறது.


ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் கரையை தொட்டு ஹாய் சொல்லி உங்களை வரவேற்கும். ஓடோடி வரும் அலைகள் ஒன்றை ஒன்று . குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலையே என்னை தொடு என்று ஓடியாடி மகிழ்கின்றனர். மாலை வேளையில் மஞ்சள் வெயிலின் சூடு கொஞ்சம் கூட தெரியாமல் தென்னந்தோப்பில் புகுந்து வரும் காற்று நம்மை தழுவும் போது உடல் மட்டுமல்ல மனசும் சிலிர்க்கிறது.


அமைதியான கடற்கரை காற்றும், வெள்ளியை தூவியது போன்ற தூய்மையான வெண்ணிற மணற்பரப்பும் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அலையும் அனைவரையும் வசீகரித்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், செம்பப்பட்டினம், செங்தலை வயல் உட்ட பகுதிகளில் இருந்து கார், இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் தங்களின் குடும்பத்தினருடன் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பொதுமக்கள் கூடுவதால் ஐஸ்கிரீம் கடைகள், பட்டாணி சுண்டல், மாங்காய் கீற்று விற்பனை, பொம்மை கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்துள்ளன


நம்ம ஊரு கொலம்பஸ்கள் லீவு விட்டாச்சுன்னா புது, புது இடங்களா தேடுவாங்க விடுமுறையை கொண்டாட. இவங்களுக்கெல்லாம் ஏற்ற இடம்னு பார்த்தா புதுப்பட்டினம் கடற்கரை பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவு செய்து வருகின்றனர். சேறும் சகுதி மற்ற கடல் பகுதியாக இருப்பதால் குளிப்பதற்கு வசதியான கடற்கரையாக இது உள்ளது. இயற்கையாக மிகவும் அழகிய முறையில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் பராமரிப்பை இழந்து இதன் இயற்கை அழகை இழந்து வருகிறது.


எனவே புதுப்பட்டினம் கடற்கரையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அடிப்படைக் கட்டமைப்பான சாலை சீரமைப்பு, மின்விளக்கு வசதி, கடற்கரை சுத்தம் செய்ய நிரந்தர பணியாளர், நிழற்குடை வசதி, பாதுகாப்பிற்கு காவலர்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, புதுப்பட்டினத்தில் இருந்து மனோரா வரை படகு சவாரி உட்பட வசதிகள் செய்து தந்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்தோடு சுற்றுலா பயணிகள் வந்து இந்த கடற்கரையை பார்த்து செல்வர். மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்கள் சுற்றுலா பயணிகள் வருகையால் வருமானத்தின் மூலம் மேம்பாடு அடைய முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.