சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் -200 டிகிரி வரையிலான கடும் குளிரில் இருந்த நிலையில், அது மீண்டும் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியர்களிடையேயும் நிலவுகிறது.
சந்திரயான் 3 திட்டம்:
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தூங்க வைக்கப்பட்ட ரோவர்:
அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிலவின் சூரிய ஒளி மறையும் சூழல் தொடங்கியதால், கடந்த 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அடுத்தடுத்து ஸ்லீப் மோடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பகுதியில் மீண்டும் சூரிய ஒளி பட தொடங்கியுள்ளது. இதனால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களில் சூரிய ஒளியே படாத அந்த பகுதியில் மைனஸ் 120 டிகிரி முதல் மைனஸ் 200 டிகிரி வரையிலான கடும் குளிர் நிலவியுள்ளது. அதனால், ஏற்பட்ட தாக்கத்தை கடந்து பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் ரோவரில் உள்ள சாதனங்கள் இந்த கடும் குளிரால் உறைந்து செயலற்று போக அதிக வாய்ப்புள்ளதாகவே அறிவியல் சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.
எப்படி எழுப்பப்படும்?
நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. பேட்டரி ஏற்கனவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழ தொடங்கியுள்ள நிலையில், சாதனங்களில் உள்ள சூரிய ஒளி தகடுகள் கூடுதல் ஆற்றலை சேமிக்க தொடங்கியுள்ளன. பூமியிலிருந்து வழங்கப்படும் சிக்னல்களை பெறும் ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியிலிருந்து வழங்கப்படும் கட்டளைகளை ஏற்று, ரோவர் உயிர் பெற்று எழுந்தால் அது மீண்டும் நிலவின் மேற்பரப்பில் பயணித்து பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும்.
மீண்டும் வருமா பிரக்யான் ரோவர்?
ஒருவேளை இஸ்ரோ பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைத்தால், அதில் உள்ள சாதனங்கள் மூலம் மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடியும். இது இந்தியாவிற்கான போனஸாகவே கருத முடியும். காரணம் ஏற்கனவே இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது மீண்டும் செயல்பட தொடங்கினால், அடுத்த 14 நாட்களுக்கும் நிலவின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் அங்கு உள்ள கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை இஸ்ரோவால் சேகரிக்க முடியும்.