பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்தை,  லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்த்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


ஆதித்யா எல்1 விண்கலம்:


கடந்த 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து 4 முற இந்த விண்கலத்தின் உயரம் உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 17 நாட்களாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்துகொண்டு இருந்த விண்கலம், தற்போது தனது முக்கிய இலக்கான லெக்ராஞ்சியன் 1 புள்ளியை நோக்கிய  தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பயணம்:


இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,ஆதித்யா-எல்1 மிஷன்: சன்-எர்த் எல்1 பாயிண்டிற்குச் சென்றது..!! Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சுற்றுப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது. விண்கலம் இப்போது சூரியன் மற்றும் பூமிக்கு இடையே உள்ள L1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு ஒரு உந்துதல் முயற்சியின் மூலம் எல்1  புள்ளியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இஸ்ரோ ஒரு சுற்றுவட்டப்பாதையில்  உள்ள ஒரு பொருளை மற்றொரு கிரகம் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையா" என்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.






இதன் மூலம், ஆதித்யா எல்1 விண்கலம் தனது முக்கிய இலக்கான எல்1 புள்ளியை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. இது சுமார் 110 நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நோக்கம் என்ன?


சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும். இதனிடையே, ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் ரீதியான தரவுகளை eஎற்கனவே சேகரிக்கத் தொடங்கியுள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துகல்களை ஆய்வு செய்ய இந்த அறிவியல் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள STEPS எனும் கருவியில் பொறுத்தப்பட்டுள்ள 6 சென்சார்கள் மூலம் இந்த அறிவியல் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று இந்த STEPS கருவி சேகரித்த தரவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதிவெப்ப, ஆற்றல்மிகு அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்களை அளவீடு செய்து அறிவியல் தரவுகளை சேகரித்துள்ளது.