மார்ச் மாதத்தில் சுமார் 4.7 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1.7 மில்லியன் கணக்குகள் பயனர்கள் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டன என்று வாட்ஸ்அப் நிறுவனம் அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் தடை
வாட்ஸ்அப் அதன் பாதுகாப்பு விதிமுறைகள் கருதி மாதாமாதம் சந்தேகத்திற்குரிய கணக்குகளை தடை செய்து வருகிறது. இந்திய அரசின் தகவல்தொழில்நுட்ப சட்டத்துக்கும், வாட்ஸ் ஆப் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத பயனர்களின் கணக்குகள் இவ்வாறு தடைக்கு உள்ளாகி இருக்கின்றன. இது தவிர பயன்பாட்டில் இல்லாத கணக்குகளையும் வாட்ஸ் ஆப் தடை செய்துள்ளது. அது குறித்த தகவல்களை நிறுவனமே அதன் மாதாந்திர அறிக்கையில் வெளியிடுகிறது.
47 லட்சம் கணக்குகளுக்கு தடை
"மார்ச் 1, 2023 மற்றும் 31 மார்ச் 2023 இடையே, 47,15,906 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 16,59,385 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடைசெய்யப்பட்டுள்ளன" என்று தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் இந்தியா மாதாந்திர அறிக்கை திங்களன்று தெரிவித்திருந்தது. முன்னதாக, முந்தைய மாதமான பிப்ரவரியில், சுமார் 4.6 மில்லியன் இந்திய கணக்குகளை தடை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஜனவரியில் 2.9 மில்லியன் கணக்குகளும், டிசம்பர் 2022ல் 3.6 மில்லியன் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பயனர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கு
+91 என்று தொடங்கும் ஃபோன் எண் மூலம் இந்தியக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கப் வளர்ந்து வரும் இந்தகாலகட்டத்தில், ஏஐ, போட் போன்ற விஷயங்கள் எல்லா ஆப்களையும் ஆட்கொண்டு விட்டன. அதோடு சேர்ந்து வளர்ந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம் உலகெங்கிலும் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு அதன் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்புதான் முக்கிய காரணம். குறிப்பாக இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த ஆப் பாதுகாப்பு நலன்கள் கருதி இதுபோன்ற செயலை தொடர்ந்து செய்து மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முயற்சித்து வருகின்றன.
முறைகேடுகளை கண்டறிதல்
குறைதீர்ப்பு சேனல் மூலம் பயனர் புகார்களுக்கு பதிலளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்குமான செயல்முறைகள் நடந்து வருகின்றன. அதன் மூலம் கூடுதலாக, வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் நடத்தைகளைத் தடுக்க கருவிகள் மற்றும் ஆதாரங்களையும் பயன்படுத்துகிறது. "நாங்கள் குறிப்பாகத் தீங்குகள் நடக்காமல் தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம்.
ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை முதலில் நிறுத்துவதே சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அது கூறியது. பதிவு செய்யும் போது, செய்தி அனுப்பும் போது மற்றும் பயனர் அறிக்கைகள் மற்றும் தொகுதிகள் வடிவில் பெறும் எதிர்மறையான பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும்போது என, முறைகேடு கண்டறிதல் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.