ஐபிஎல் தொடரின் நேற்றைய 43 வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டும் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாகவே டு பிளிசி 44 ரன்களும், விராட் கோலி 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கை கூட தொடவில்லை. 


127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோவிற்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். முதல் ஓவரிலேயே கைல் மேயர்ஸின் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அதனை தொடர்ந்து, ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்து தடுமாறியது. 


அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸும் 11 வது ஓவரில் 13 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவரில் கிருஷ்ணப்ப கவுதமும் விக்கெட்டை இழக்க, லக்னோ என்னும் படகு தோல்வியை நோக்கி சென்றது. பீல்டிங்கின்போது ஏற்பட்ட தொடை காயம் காரணமக கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. 11வது இடத்தில் களமிறங்கிய ராகுல் தான் சந்தித்த மூன்று பந்துகளில் ஸ்கோர் செய்யவில்லை. மறுமுனையில், மிஸ்ரா அவுட்டாக, லக்னோ அணி 19. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 


இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வெற்றி பெற்றதை அடுத்து, விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டியில், பீல்டிங்கின் போது விராட் கோலி ஆரம்பம் முதலே மிகவும் உற்சாகமாக காணப்பட்டார், இதில் க்ருனால் பாண்டியாவின் கேட்ச்சைப் பிடித்த பிறகு தனது மகிழ்ச்சியை விராட்கோலி ஆக்ரோஷமான முறையில் வித்தியாசமாக வெளிப்படுத்தினார். இதன்பிறகு, லக்னோ அணிக்காக நவீன் உல் ஹக் பேட்டிங் செய்தபோது, ​​விராட்கோலி அவருடனும் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார்.






விராட் கோலியின் இந்த நடத்தையை பார்த்த நடுவர்களும் இடையில் வந்து அவரை சமாதானப்படுத்தினர். போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டிருந்த போது கோலி, கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமித் மிஸ்ரா வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.






கே.எல். ராகுலுடன் பேசிய விராட் கோலி: 


கவுதம் கம்பீருடனான வாக்குவாதத்திற்குப் பிறகு, விராட் கோலி கே.எல். ராகுலுடன் பேசுவதை காண முடிந்தது. இதன் போது அவர் பேசியதில் இருந்து அந்த சம்பவத்தை பற்றி தான் பேசியுள்ளார் என்பது தெளிவாக புரியும். உண்மையில், சம்பவத்தின் போது, ​​கைல் மேயர்ஸ் முதலில் கோலியுடன் சில உரையாடலைக் கண்டார், அதன் பிறகு கவுதம் கம்பீர் வந்து அவரை அங்கிருந்து போக சொன்னதாக கூறப்படுகிறது. அதன் பிறகு உடனடியாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.