புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுடைய மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கும், குளத்தூர் அருகே உள்ள மேலசவேரியார்பட்டினத்தை சேர்ந்த குமரன் மகள் நாகேஷ்வரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அரவிந்த் சென்னையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகேஷ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நாகேஷ்வரிக்கும், அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் விரைந்து வந்து நாகேஷ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 



 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை நாகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நாகேஷ்வரியின் உடலை அன்னவாசல் அருகே உள்ள மேட்டுக்களம் பகுதியில் உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகேஷ்வரியின் தற்கொலைக்கு காரணமான அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி- புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே குளத்தூரில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நாகேஷ்வரியை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக அவரின் கணவர் அரவிந்த், மாமனார் தங்கமணி, மாமியார் விஜயராணி ஆகிய 3 பேரையும் அன்னவாசல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண