ட்விட்டர் சமூக வலைத்தளம் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான வலைத்தளங்களில் ஒன்று. இந்தியாவில் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு 9 கோடிக்கும் மேலாக பயனாளர்கள் இருக்கின்றனர். ட்விட்டர் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ட்விட்டர் தளத்தில் அதிகமாக வலம் வந்தது பல போட்காஸ்ட்கள் மற்றும் டான் எஃப்எம் போன்றவை தான். ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக போட்காஸ்ட் மற்றும் இணையதள எஃப் எம் மூலம் பாடல் கேட்பதை அதிகம் விரும்பினர்.
அதைபோல் இந்தாண்டு ட்விட்டர் வலைத்தளமே தன்னுடயை தளத்தில் போட்காஸ்ட் செய்வதுபோல ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பெயர் தான் ட்விட்டர் ஸ்பேசஸ். இதன் மூலம் ஒருவர் சினிமா.கலை,அரசியல்,சமூக பிரச்னை போன்ற எந்த விஷயம் தொடர்பாகவும் ஸ்பேசஸ் தொடங்க முடியும். ஸ்பேசஸை தொடங்கும் நபர் தான் யார் யார் பேசலாம், யார் யார் கேட்கலாம் என்பதை தீர்மானிக்க முடியும். இதன் மூலம் ட்விட்டர் தளத்தில் உள்ள பயனாளர்கள் ஒருவருக்கு ஒருவர் எளிதாக தங்களின் கருத்துகளை பரிமாறவும், விவாதம் செய்யவும் பயன் உள்ளதாக ஸ்பேசஸ் அமைந்துள்ளது.
ஐபோன்களில் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த வசதி வந்திருந்தாலும் இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஆண்டிராய்ட் போன்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் இது பெரியளவில் வரவேற்பை பெற்றது. இந்த வசதி மூலம் பிரபலமானவர்களும் மக்களுடன் பேசுவதற்கு எளிமையான சூழல் அமைந்துள்ளது. குறிப்பாக பாடகர்கள் பிரதீப் குமார் மற்றும் சின்மயி அன்மையில் நடத்திய ட்விட்டர் ஸ்பேசஸ் பலருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் மக்களுக்கு அது ஒரு பெரிய ஆனந்தமாக அமைந்தது.
'லெவல் 3 backpack'- பப்ஜி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய புதிய 15 நொடி டீசர்..!
இது தமிழ் ட்விட்டர் வாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இளையராஜா ஹிட்ஸ், 90 கிட்ஸ் ஸ்பேசஸ், சமூக பிரச்னை தொடர்பான ஸ்பேசஸ் எனப் பல ட்விட்டர் வாசிகளிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. அதேபோல் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் கருத்து பரிமாறி கொள்ள இது மிகவும் முக்கியமான ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி நடத்திய ஸ்பேசஸில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் பங்கேற்று உரையாடினார். அது பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இளைஞர்கள் மத்தியில் இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் ஒரு டீக்கடை அரட்டை போன்ற பொருளாக மாறியது. கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் குறிப்பாக டீ கடைகள், மைதானங்கள் போன்ற இடங்களில் அரட்டை அடிப்பது வழக்கம். எனினும் கடந்த ஒராண்டிற்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நண்பர்களுடன் அரட்டை அடிக்க வழி தெரியாமல் திணறியவர்களுக்கு ட்விட்டர் ஸ்பேசஸ் ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அத்துடன் ட்விட்டர் தளத்தில் இது நாள் வரை ட்வீட்களில் மட்டும் பேசி கொண்ட பலர் ஒருவருக்கு ஒருவர் ஸ்பேசஸ் மூலம் முதல் முறையாக உரையாடி கொண்டனர். இதன் மூலம் தங்களின் ட்விட்டர் நண்பர்கள் குறித்து சற்று தெரிந்துகொள்ள உதவியாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் சந்தில் ஜாலியான அரட்டை, வெட்டி பேச்சு, காரசார விவாதம், பாட்டுக்குப் பாட்டு, அரசியல் என அனைத்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாடல்கள் தொடர்பாக நடைபெறும் ட்விட்டர் ஸ்பேசஸிற்குள் சென்றால் 90 கிட்ஸின் ஃபேவரைட் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியான லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு ஞாபகத்திற்கு வரும். இப்படி பல அனுபவங்களை தரும் ட்விட்டர் ஸ்பேசஸ் ட்விட்டர்வாசிகளுக்கு கிடைத்த ஒரு சிறப்பான வசதியாக கருதப்படுகிறது.