இந்தியாவில் கடந்த 25ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தன. இதை முதலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்தன. பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிகளை ஏற்று கொள்வதாக கூறி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ட்விட்டர் நிறுவனம் மட்டும் மத்திய அரசுக்கு பிடிகொடுக்காமல் இருந்தது. இதற்கிடையே புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கண்காணிக்க நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக்குழு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்தும், அதனை சமூக வலைதளங்கள் கடைபிடிப்பது தொடர்பாக விவரங்களையும் கண்காணிக்கும். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் வரும் 18-ம் தேதி ஆஜராக வேண்டுமென ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முரண்டு பிடித்த ட்விட்டர் குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்தார். அதில் "ஒரு நாட்டில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்படி மதிக்கவில்லை என்றால் நாட்டில் தொழில் செய்யக் கூடாது. இந்தப் புதிய விதிகள் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. அதை நாங்கள் தற்போது கேட்க தயாராக இல்லை. ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளது. ஆகவே இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விதிகளை ஏற்று நடக்க வேண்டும். இந்திய அரசு தனிநபரின் தகவல்கள் எப்போதும் கேட்காது. ஆனால் தீவிரவாதம், பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை செய்பவர்களின் செய்திகளை மற்றும் தகவல்களை தான் படிக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதால் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியாது. ஜனநாயக நாட்டிலும் ஒரு சில விதிகளுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். அமெரிக்காவில் எப்படி விதிகளை பின்பற்றி தொழில் செய்கிறார்களோ அதேபோன்று தான் இந்தியாவிலும் விதிகளை ஏற்று தொழில் செய்ய வேண்டும்'' என்றார்.
மத்திய அரசின் விதிகளுக்கு ட்விட்டர் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர் மத்திய அரசின் தொடர் எச்சரிக்கைக்கு பின் பதிலளித்த ட்விட்டர் நிறுவனம். "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க முயற்சித்து வருகிறோம். சிறப்பு தொடா்பு அதிகாரி மற்றும் உள்நாட்டு குறைதீா் அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமித்துள்ளோம்.
அந்த பொறுப்புகளுக்கான நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும். பெருந்தொற்று காலமென்பதால் சில நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை இன்னும் ஒரு வாரத்தில் அரசுக்குத் தெரிவிக்கிறோம். இந்தியாவில் தொடர்ந்து மக்களுக்கான பொது ஊடகமாக செயல்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தது.
இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!