மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகளுக்கு 100 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதை அடுத்து  மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டு மாநிலம் 13 மாவட்டங்களாக தொடங்கி நிர்வாக வசதிக்காக படிப்படியாக மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது கடைசியாக 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட கட்டுப்பாட்டில் தான் இதுவரை இயங்கி வருகிறது. 

Continues below advertisement


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியில் தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குவதாக ஒப்புதல் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் உள்ள 8.5 ஹெக்டேர் இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வந்ததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. ஒப்பந்தபடிவங்கள் வரும் 17-ஆம் தேதி முதல் ஜுலை 22 ம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என்றும். பணிகளை 18 மாதங்களுக்கு முடிக்க வேண்டுமென்றும் அந்த டெண்டரில் தெரிவித்துள்ளனர். 


அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்ட மாவட்டம் என்பதால் மாவட்டத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் புதிதாக ஆட்சியேற்றுள்ள திமுக அரசு கிடப்பில் போட்டுவிடும் என பரவலாக பேசப்பட்ட நிலையில் புதிய அரசு அமைந்த ஒரு மாதத்தில்  மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது மயிலாடுதுறை மாவட்ட மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1991-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996-ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் பிரிக்கப்பட்டது, கடைசியாக 2020 சென்ற ஆண்டு நிர்வாக வசதிக்காக நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்படுவதாக கூறி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் பின்னர் பிரிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக  கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேற்றபட்டு தற்போது சிறுக சிறுக முழு வடிவம் பெற தொடங்கியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola