டிஜிட்டல் உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 5G தொழில்நுட்பத்தின் பங்கு அதிமாக இருக்கும். ஏனென்றால் இது வெறும் ஒரு தொலைதொடர்பு சார்ந்த தொழில்நுட்பம் மட்டுமல்ல. அதையும் தாண்டி இதில் வேறு சில சிறப்புகளும் உள்ளன. மேலும் இந்த தொழில்நுட்பம் 4G-ஐ விட மிகவும் பயன் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி இந்தியாவில் 5G தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோஃபோன் உள்ளிட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5 GHzபேண்ட் மூலம் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளது. சோதனை தொடர்பான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சோதனையில் 1 Gbps டவுன்லோட் வேகமும், 100Mbps அப்லோட் வேகத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. இது இண்டர்நெட் பயனாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த வேகத்தில் இண்டர்நெட் என்றால் ஒரு முழுப்படத்தை டவுன்லோட் செய்ய சில விநாடிகளே போதுமானது. படமே விநாடிகளில் டவுன்லோடு ஆகுமென்றால் வீடியோக்கள் பார்க்கும் போது பஃபர் என்ற வார்த்தைக்கே இடமில்லை. தற்போது எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த 5ஜி சோதனையை ஏர்டெல் செய்துவருகிறது. ஆனால் சோதனையின் போது கொடுக்கப்படும் இணையத்தின் வேகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது கொடுக்கப்படுமா என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.
'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!
இந்த 5ஜி சோதனையை அடுத்து மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் 5ஜிக்கான சோதனை தீவிரமாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் 5ஜி செல்போன்கள் சந்தைகளில் குவிந்து வருகின்றன. பட்ஜெட்டுக்குள் 5ஜி போன்கள் தினம் தினம் அறிமுகமாகின்றன.
5ஜி தொழில்நுட்பம் மில்லிமீட்டர் அலை ஸ்பெக்ட்ரமில் (30-300 கிகா ஹெர்ட்ஸ்) என்ற அதிவேக அதிர்வெண் பயன்படுத்தி இயங்கும். இதனால் இதில் பெரியளவில் தரவுகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் இதன் வேகமும் 1-20 ஜிபி வரை செல்லும். இதன் காரணமாக பல தேவைக்கு இதை எளிதில் பயன்படுத்த முடியும். 2000ஆம் ஆண்டு 3G தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதைவிட அதிவேகமாக 4G தொழில்நுட்பம் வந்தது. தற்போது அதற்கு அடுத்தப்படியாக மின்னல் வேக தொழில்நுட்பமாக 5G தொழில்நுட்பம் வந்துள்ளது.
மிக விரைவில் 5ஜி போன், 5ஜி நெட்வொர்க் என டிஜிட்டல் உலகம் அதிவேகமாக இயங்கவுள்ளதை மறுக்க முடியாது. ஏர்டெல் போலவே விரைவில் ஜியோ, வோடோபோன் நிறுவனங்களும் 5ஜி சேவையை சோதனை செய்து அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பரில் பேசிய அம்பானி, 2021 இரண்டாம் பாதியில் 5ஜியை ஜியோ அறிமுகம் செய்யும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.