இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்ற அணியில் முக்கிய வீரராக வலம் வந்தவர், இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக பதவி வகித்தவர், இந்திய விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருது, நாட்டின் போற்றத்தக்க விருதான பத்மஸ்ரீ விருது  போன்றவற்றை பெற்றவர், நாட்டிற்காக ராணுவ சேவை ஆற்றியவர் போன்ற பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் வறுமையில் வாடி உயிரிழந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் தீர வேண்டும்.


மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா மாவட்டத்தில் 1933-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தவர் சங்கர் லட்சுமண். சிறுவயது முதலே ஹாக்கியின் மீது தீராத ஆர்வம் கொண்ட சங்கர் லட்சுமண் 13 வயதிலே பள்ளிப்படிப்பை கைவிட்டார். பின்னர், அவர் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர், இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்து ஆடத்தொடங்கினார்.





1956-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். மிகச்சிறந்த கோல்கீப்பரான அவரது ஆட்டத்தால் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியுறாமல் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. 1958-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய போட்டியிலும் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்ற சாதனையில் லட்சுமண் பங்கு முக்கியமானது.


1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீர் அகமது அடித்த கோலால் இந்தியா அந்த போட்டியில் தோல்வியுற்றது. இதனால், ஒலிம்பிக்கில் தோல்வியையே காணாமல் 30 வெற்றிகளைப் பெற்று வந்த இந்தியாவில் சாதனைக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால், அப்போது இந்திய ரசிகர்கள் சங்கர் லட்சுமண் வீடு மீது தாக்குதல் நடத்தினார்.




பின்னர், 1962-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு பதக்கத்தை வென்று தந்து ரசிகர்களின் இதயத்தில் மீண்டும் இடம்பிடித்தார். பின்னர், டோக்கியோவில் 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாக மீண்டும் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டது. அதே ஆண்டில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதை பெற்றார்.


1966-ஆம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய ஹாக்கி அணி பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றது. இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாகிய முதல் கோல்கீப்பர் என்ற பெருமையையும் தன் வசம் வைத்துள்ளார். 1967-ஆம் ஆண்டு அவரது விளையாட்டு சாதனைகளை பாராட்டி பத்மஸ்ரீ விருதை இந்திய அரசாங்கம் அவருக்கு வழங்கி கவுரவித்தது. ஆனால், 1968-ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கவில்லை. இதையடுத்து, சங்கர் லட்சுமண் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.




இதையடுத்து, நாட்டிற்காக பல சாதனைகளையும், பதக்கங்களையும் படைக்க ஹாக்கி மைதானத்தில் ஆடிய சங்கர் லட்சுமணின் கடைசி கால வாழ்க்கையில் வறுமை விளையாடியது. நீரிழிவு நோயாலும், குடற்புழு நோயாலும் அவதிப்பட்ட சங்கர் லட்சுமண் தனது கடைசி காலத்தில் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்பட்டார். குடற்புழுவை நீக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். ஆனால், அவரிடம் போதியளவு பணம் இல்லாததால் அவர் இயற்கை முறையிலே சிகிச்சை மேற்கொள்வதாக கூறிவிட்டார்.


அவரது நிலை பற்றி அறிந்த மத்திய பிரதேச அரசாங்கம் ஓரளவு நிதி உதவி செய்தது. ஆனாலும், வறுமையின் பிடியிலும் நோயின் பிடியிலும் சிக்கிய ஒலிம்பிக் தங்க மகன் சங்கர் லட்சுமண் 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன், மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் தகனம் செய்யப்பட்டது.


அடுத்த வாரம் மற்றுமொரு சுவாரஸ்யமான அறியப்படாத தகவல்களுடன் Untold Stories தொடரில் சந்திக்கலாம். 


மேலும் படிக்க : Untold Story 2: மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள்.! முதல் அர்ஜூனா விருது..! சுட்டுக்கொல்லப்பட்ட ஹாக்கி ஜாம்பவான் கதை!


மேலும் படிக்க : Untold Story 3: இது பஞ்சாபின் சார்பட்டா கதை..! முகமது அலியை எதிர்த்த ஒரே இந்தியர்.! இது கவுர்சிங் வரலாறு!