கடந்த வாரம் மகாபாரத தொடரில் நடித்து புகழ் பெற்றவரும், மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் பீம்பாயாக நடித்து அசத்தியவருமான பிரவீன்குமார் சோப்தி காலமானார். 74 வயதில் உயிரிழந்த அவரை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டு போட்டிகளிலும், காமன்வெத் போட்டிகளிலும் பல பதக்கங்களை குவித்தவர் என்பதும், இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றவர் என்பதும் பலருக்கும் தெரியாது.




பிரவீன்குமார் சோப்தி அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரர். இவர் பஞ்சாபில் 1947ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பிறந்தவர். ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்ட பிரவீன்குமார் தனது 20வது வயதிலே ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்பு படை வீரராக தனது வாழ்க்கையை தொடங்கினார். விளையாட்டின் மேல் ஆர்வம் கொண்ட அவர் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் விளையாட்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.


1966ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் பங்கேற்ற பிரவீன்குமார் சோப்தி வட்டு எறிதலில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதே ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இதையடுத்து, 1974ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பங்கேற்றற பிரவீன்குமார் அந்த தொடரிலும் இந்தியாவிற்காக வட்டு எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். 1974ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.




1958ம் ஆண்டு மில்காசிங் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிய பிறகு காமன்வெல்த் போட்டியில் இந்தியா எந்த பதக்கமும் வாங்கவில்லை. அவருக்கு பிறகு காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் பிரவீன்குமார் சோப்தி. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தற்போது வரை வென்றுள்ள ஒரே பதக்கம் அதுதான். 1966ம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் பிரவீன்குமார் குண்டு எறிதலில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.


மேலும் படிக்க : Untold Story Episode 7: தலிபான்களால் தந்தை கொலை..! போலி பாஸ்போர்ட் மூலமாக தப்பியோட்டம்..! கால்பந்து வீராங்கனையின் தீரமான கதை...!


அவரது அபார திறமையால் 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடும் வாய்ப்பு பெற்றார். அந்த போட்டியில் இந்தியாவிற்காக குண்டு எறிதலில் 60.84 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்தார். 1972ம் ஆண்டு வட்டு எறிதலில் இந்தியாவிற்காக பங்கேற்றவர் 53.12 மீட்டர் தூரம் வரை எறிந்தார்.




திரைப்பட வாய்ப்பு வந்ததைத் தொடர்ந்து இந்தி படமொன்றில் அறிமுகமானார். பின்னர், மகாபாரத தொடரில் பீமர் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம்பாய் என்ற கதாபாத்திரத்தில் தனது ஆஜானுபாகுவான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருப்பார். 2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரவீன்குமார் சோப்தி பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.


மேலும் படிக்க : Untold Stories 7 : ஆக்ஸ்போர்டில் படிப்பு...! ஹாக்கிதான் துடிப்பு...! இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றுத்தந்த பழங்குடியின வீரர் ஜெய்பால்சிங் முண்டா...!