உலகை இன்று பிரபலங்களாக உலா வரும் அனைத்து விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலும் ஒரு போராட்டக் கதை நிச்சயம் இருக்கும். சில வீரர்களின் போராட்டங்கள் அவர்கள் விளையாட்டில் தங்களின் இடத்தை அடைவதற்கானதாக இருக்கம். சில வீரர்களின் போராட்டங்கள் அவர்கள் வாழ்வதற்கே போராட வேண்டியதாக இருக்கும். அப்படி தந்தையை இழந்து, தாய்நாட்டை இழந்து, தப்பியோடி வந்து இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வீராங்கனையின் கதையைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.


கடந்தாண்டு உலகம் முழுவதும் அனைவரையும் ஒருசேர வருத்தப்பட வைத்த நிகழ்வுகளில்  ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது ஆகும். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியை கைப்பற்றிய போதும் சரி, கைப்பறற போராடியபோதும் சரி மக்கள் உயிரிழப்புகள் என்பது கணக்கில் அடங்காதது.




1988ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் நதியா நதீம். இவரது தந்தை ஆப்கான் ராணுவத்தின் ஜெனரலாக பொறுப்பு வகித்த ரபானி நதீம். ராணுவத்தின் ஜெனரலாக பொறுப்பு வகித்த அவரை கடந்த 2000ம் ஆண்டு தலிபான்கள் தூக்கிலிட்டனர். அப்போது நதியா நதீமிற்கு 11 வயது. இதையடுத்து, நதியா நதீம் உள்பட அவரது குடும்பத்தினர் மற்றும் பலரும் ஆப்கானிஸ்தானை விட்டுதப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். லண்டனில் அவர்களது உறவினர்கள் பலரும் இருந்ததால், எப்படியாவது லண்டன் சென்றுவிட்டால் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வந்துள்ளனர்.


அங்கிருந்து நதியா நதீம் உள்பட தப்பிவந்த அனைவரும் போலி பாஸ்போர்ட் மூலமாக இத்தாலி தப்பிச்சென்றுள்ளனர். அங்கிருந்து ஒரு டிரக் மூலமாக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தனர். நதியா நதீம் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் லண்டன் செல்கிறோம் என்ற எண்ணத்திலே சென்று கொண்டிருந்தனராம். சில நாட்கள் கழித்து அவர்களை கீழே இறக்கிவிட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அவர்களை இறக்கிவிட்டிருப்பது லண்டனில் அல்ல, டென்மார்க் என்று அறிந்தனர்.





பின்னர், நதியா நதீம் குடும்பத்தினர் அகதிகளாக டென்மார்க்கிலே வசிக்கத் தொடங்கினர். நதியா நதீம் தனது கவனத்தை படிப்பிலும், கால்பந்திலும் செலுத்தினார். டென்மார்க்கில் முதன்முறையாக பி52 ஆல்போர்க் அணிக்காக ஆடத்தொடங்கினார். பின்னர், வைபோர்க் அணிக்காகவும் ஆடினார். 7 ஆண்டுகள் டென்மார்க் நாட்டு அணிக்காக ஆடினார்.


அவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட உலகின் மிகப்பெரிய கால்பந்து ஜாம்பவன் கிளப்பான மான்செஸ்டர் சிட்டி அணி அவரை தங்கள் பக்கம் எடுத்துக்கொண்டது. 2018ம் ஆண்டு அவர் மான்செஸ்டர் சிட்டிக்கு குடிபெயர்ந்தார். பின்னர், 2018ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி மான்செஸ்டர் அணிக்காக அறிமுகமாகினார். ஒரு ஆண்டுகள் கழித்து அவர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் சைட் அணியில் கடந்த 2019ம் ஆண்டு இணைந்தார். இவ்வளவு போராட்டங்களுக்கும் மத்தியிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். தனது அயராத உழைப்பாலும், படிப்பாலும் கடந்தாண்டு தனது மருத்துவ படிப்பை நிறைவு செய்தார்.




மகளிர் கால்பந்து வரலாற்றில் டிவிசன் 1 பிரிவில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முதன்முறையாக நதியா நதீமின் அபார ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச்சாதனையை படைத்தது. அந்த தொடரில் மட்டும் அவர் 27 ஆட்டங்களில் 18 கோல்கள் அடித்திருந்தார்.


சிறுவயதிலே தந்தையை தலிபான்களால் பறிகொடுத்து, போலி பாஸ்போர்ட் மூலமாக நாட்டை விட்டு வெளியேறி, டென்மார்க்கிற்கு தப்பி வந்து அங்கிருந்து தன்னை கால்பந்து வீராங்கனையாக வளர்த்துக்கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய கால்பந்து வீராங்கனையாக வலம் வருவதுடன், ஒரு மருத்துவராகவும் நதியா நதீம் உருவாகியிருப்பது என்பது வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு உந்துசக்தியாகவே அமைந்துள்ளது. அவரது சாதனைகள் மேலும் தொடர ஏபிபி நாடு சார்பாக வாழ்த்துவோம்.


அடுத்த வாரம் வேறு ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுடன் அன்டோல்ட் ஸ்டோரியில் சந்திக்கலாம்.


மேலும் படிக்க : Untold Stories 6 : முதல் ஹாட்ரிக்..! முதல் அர்ஜூனா விருது..! மறக்கப்பட்ட இந்திய மகளிர் கால்பந்தின் ரியல் சிங்கப்பெண் சாந்தி முல்லிக்...!


மேலும் படிக்க : huntold stories 5 : “ரெண்டு கை இல்லன்னாலும் கிரிக்கெட் ஆடுவேன் சாரே..” - அசத்தும் பாரா கிரிக்கெட்டின் கேப்டன்..!