கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.


பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், அவற்றை குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் நீட் தேர்வு சமூக நீதியோடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து காமராஜர்புரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு துணி சலவை மற்றும் அயன் கடையில் வாக்கு சேகரிக்க சென்ற அண்ணாமலை, ஒரு சட்டையை அயன் செய்தபடி வாக்குகள் சேகரித்தார்.




இதற்கு முன்னதாக கோவை கொடிசியா அருகே தனியார் விடுதியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய இணை அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடனிருந்தனர். அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,தலைசிறந்த வரலாறுமிக்க பட்ஜெட்டை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்துள்ளது. விசன் இந்தியா அடுத்த 25 வருடங்களில் நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்த பி.எம் கதிசக்தி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நாமக்கல் - முசிறி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப் பாதை கொண்டு வரப்பட்டுள்ளது. இரயில்வே துறையில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா சூழ்நிலை காரணமாக ஒட்டல்கள் தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை.




கோதாவரி, பென்னாறு காவேரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தில் நீர் பாசனம் அதிகளவில் கைகொடுக்கும். நதிகள் இணைப்பது சாதாரண செயல் இல்லை. இதை மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சி வாயிலாக 1 முதல் 12 வகுப்பு வரைக்கும் பாடங்கள் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து துறையிலும் சிறந்து விளங்ககூடிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.


அதேசமயம் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு எல். முருகன் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 மற்றும் 81 வது வார்டுகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.