மூன்று திசைகளிலும் தண்ணீரால் சூழ்ந்துள்ள இந்திய தீபகற்பத்தில், நீச்சலில் சாதனை படைத்த பல ஜாம்பவான்கள் உள்ளனர். சுதந்திரம் பெற்ற தொடக்க கால இந்தியாவில் உதித்த நட்சத்திரமாகவும், இன்றைய இந்திய  நீச்சல் வீரர்களுக்கும் ஒரு மானசீக குருவாகவுமே இருப்பவர் மிஹிர்சென்.  ஆபத்து மிகுந்த ஆங்கில கால்வாய் முதல் ஆசிய வீரர், ஒரே ஆண்டில் உலகின் 5 கண்டங்களின் கடலில் நீந்தியவர் என்ற அசாத்திய சாதனைகளை சாத்தியமாக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்தவர்.


மேற்கு வங்காளத்தில் உள்ள புரிலியா கிராமத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் மிஹிர்சென். இவரது தந்தை ரமேஷ்சென்குப்தா ஒரு மருத்துவர். 1938ம் ஆண்டு மிஹிர்சென்னின் குடும்பம் ஒடிசாவில் உள்ள கட்டாக்கிற்கு குடிபெயர்ந்தது. பள்ளிப்படிப்பை முடித்த மிஹிர்சென்னுக்கு இங்கிலாந்தில் புகழ்பெற்ற உட்கல் பல்கலைகழகத்தில் சட்டம் பயில வாய்ப்பு கிடைத்தது.




இங்கிலாந்தில் சட்டம் பயிலச் சென்ற மிஹிர்சென்னுக்கு, 1950ம் ஆண்டு உலகின் ஆபத்தான கால்வாயான இங்கிலீஷ் கால்வாய் எனப்படும் ஆங்கில கால்வாயை கடந்த முதல் பெண்மணியான ஜெர்ட்ரூட் எடெர்ல் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைப்படித்த அவருக்கு உள்ளுக்குள் ஒரு புது உத்வேகம் பிறந்துள்ளது. நீச்சல் பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் இருந்த மிஹிர் சென்னுக்கு நீச்சலில் ஏதாவது ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதற்காக அவர் ஆரம்ப காலத்தில் ஏராளமான கடினமான சவால்களை சந்திக்க நேரிட்டது. முறையாக நீச்சலை கற்பதற்காக நீச்சல்குளத்திலே மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டார்.


நீச்சலில் போதிய பயிற்சியை எடுத்த பிறகு, நம்மால் எங்கும் நீச்சல் அடிக்க முடியும் என்று நம்பிய மிஹிர்சென் ஆபத்தான ஆங்கில கால்வாயை கடக்க முடிவு செய்தார். இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இந்த இங்கிலீஷ் கால்வாயில் உயிருக்கு ஆபத்தான ஜெல்லி மீன்கள், மோசமான வானிலை, கடல் சீற்றம், நேவிகேஷன் கோளாறுகள், கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய்கள் என்று இன்றும் உள்ளது. அப்படியென்றால் போதுமான அளவு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத 1950 காலகட்டத்தில் எந்தளவிற்கு மோசமாக இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.




அத்தனை தடைகளையும் கடந்து இங்கிலீஷ் கால்வாயை கடக்க மிஹிர்சென் முடிவு செய்தார். 1955ம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயை கடக்க முதல் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அப்போது கடலில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரது முயற்சி தோல்வியை தழுவியது. ஆனாலும், மனம் தளராத மிஹிர் சென் தோல்வியையே தனது வெற்றிக்கான முதற்படியாக கொண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டார்.


1958ம் ஆண்டு மீண்டும் இங்கிலீஷ் கால்வாயை கடக்க நீந்திய மிஹிர்சென் 14 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி ஆங்கில கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசியாவைச் சேர்ந்த நபர் என்ற அரிய சாதனையையும் படைத்தார். இந்த ஒற்றைச் சாதனை அவருக்குள் பல அரிய சாதனைகளை படைக்க புது தன்னம்பிக்கையை உருவாக்கியது.




1966ம் ஆண்டு மிஹிர்சென் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலகமே திரும்பிப்பார்த்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஒரே ஆண்டில் பாக் ஜலசந்தியை 25 மணி நேரம் 36 நிமிடங்களிலும், ஸ்பெயின், மொரோக்கொ மற்றும் பிரிட்டிஷில் பாயும் கிப்ரல்தார் ஜலசந்தியை 8 மணி நேரம் 1 நிமிடத்திலும், துருக்கியில் உள்ள டேர்டெனில்ஸ் கடல் பகுதியை 13 மணி நேரமும், துருக்கியில் உள்ள பாஸ்போரஸ் கடல்பகுதியை 4 மணி நேரமும், பனாமாவில் உள்ள பனாமா கேனல் பகுதியை 34 மணி நேரம் 15 நிமிடத்தில் நீந்திக் கடந்தார். இந்த சாதனைகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் மிஹிர்சென் படைத்தார்.


பனாமா கேனலை நீந்திக்கடந்த முதல் அமெரிக்கா இல்லாதவரும், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியை இணைக்கும் பனாமா கால்வாயை கடந்த மூன்றாவது நபர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும், ஒரே ஆண்டில் 5 கடல்களை நீந்திக் கடந்த ஒரே நபர் என்ற அரிய சாதனையையும் இன்றுவரை தன்வசம் வைத்துள்ளார்.




மிஹிர் சென் படைத்த இந்த அரிய சாதனை அவருக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் பெருமையை தந்தது. அவரின் சாதனையால் ஈர்க்கப்பட்ட பல இந்தியர்களும், நீச்சல் வீரர்களும் அவரை ஒரு ரோல் மாடலாகவே கொண்டு நீச்சலில் பல அரிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.


ஆங்கில கால்வாயை கடந்த அடுத்த ஆண்டான  1959ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியும், ஒரே ஆண்டில் 5 பெருங்கடல் பகுதிகளை நீந்திக்கடந்த அடுத்த ஆண்டே 1967ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. இந்திய நீச்சல் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்த மிர்ஹிர்சென் 1997ம் ஆண்டு ஜூன் 11ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தாலும் பல இளைஞர்களுக்கு உந்துசக்தியாவும், உத்வேகமாகவும் மிஹிர் சென் தன் சாதனைகளால் வாழ்ந்து வருகிறார்.


மேலும் படிக்க : Untold Stories Episode 15: குடிசையில் பிறந்த கோபுரம்..! தடைகளை கடந்து சாதித்த தமிழக சிங்கப்பெண்...!


மேலும் படிக்க : Untold Stories Episode 16: தடை அதை உடை...! எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால்..!