இந்தியாவுக்காக தடகளப்போட்டிகள்ல ஏராளமான பெண்கள் பதக்கங்களை வாங்கிருக்காங்க.. அதுல நம்ம தமிழ்நாட்டோட சிங்கப்பெண்கள் பட்டியலும் ரொம்ப பெருசு.. அப்படிப்பட்ட பட்டியல்ல ரொம்பவே முக்கியமானவங்க சாந்தி சவுந்திரராஜன். புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற காதக்குறிச்சியில 1981ம் வருஷம் ஏப்ரல் 17-ந் தேதி பிறந்தவங்கதான் சாந்தி சவுந்திரராஜன்.
அப்பா, அம்மா ரெண்டு பேரும் பக்கத்துல இருந்த செங்கல் சூளையிலதான் கூலி வேலை பாத்தாங்க.. ரொம்பவே குட்டியா இருந்த ஒரு குடிசை வீட்டுலதான் சாந்தி சவுந்திரராஜன் அவங்க குடும்பத்தோட இருந்தாங்க.. சாந்தி கூட பிறந்தவங்க மொத்தம் 4 பேரு… அப்பா, அம்மா வேலைக்கு போன பிறகு அவங்க 4 பேரையும் பாத்துக்க வேண்டியது சாந்தியோட பொறுப்புதான்… ரோட்டு ஓரத்துல இருந்த அவங்க வீட்டுக்குனு தனியா பாத்ரூமோ, டாய்லேட்டோ கிடையாது.. அவங்க தாத்தாதான் ஓரளவு உதவிகள் பண்ணிட்டு வந்தாரு..
சாந்திக்கு 13 வயசு இருக்குறப்ப ஓட ஆரம்பிச்சாங்க.. சாந்தியோட தாத்தா ஒரு திறமையான ஓட்டப்பந்தய வீரர்.. சாந்திக்கு இயல்பாவே வேகமா ஓடுற திறமை இருந்ததால அவங்களோட குடிசைக்கு வெளியில இருந்த மண்ணுல ஓடி பயிற்சி எடுக்க ஆரம்பிச்சாங்க.. ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களுக்குனு ஒரு ஜோடி ஷூ ஓட்றதுக்காக வாங்குனாங்க.. 8-ம் வகுப்பு படிக்குறப்பதான் சாந்தி முதன்முதலா பள்ளிக்கூடத்துல ஓட்டப்போட்டியில பங்கேற்றாங்க.. அந்த போட்டியிலே எல்லாரையும் தோற்கடிச்சு ட்ராபியையும் ஜெயிச்சாங்க.. சாந்திக்கு ஆரம்ப காலத்துல டம்ளர், தட்டு, கண்ணாடி கிளாஸ் இதுங்கதான் பரிசுப்பொருளா கிடைச்சுச்சு.. பக்கத்துல இருந்த ஒரு பள்ளிக்கூட பயிற்சியாளர் சாந்தியோட திறமையை பாத்து ஆச்சரியப்பட்டாரு.. இதுனால சாந்தியை அவங்க ஸ்கூல்ல சேத்துக்கிட்டாங்க.. சாந்திக்கு ஸ்கூல் பீஸ், பள்ளிச்சீருடை, சாப்பாடு எல்லாத்தையும் அந்த பள்ளிக்கூடமே பாத்துகிட்டாங்க..
ரொம்ப கஷ்டமான சூழல்ல வளர்ந்த சாந்திக்கு முதன்முறையா ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பாடு கிடைச்சதே அப்போதான்.. சாந்தி பள்ளிக்கூடத்துல தடகளப் போட்டிகள்ல பண்ணுன சாதனையால அவங்களுக்கு புதுக்கோட்டையில இருக்குற காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைச்சுச்சு.. சாந்தியோட திறமையை இன்னும் பட்டை தீட்ட, சாந்தியை சென்னையில இருக்குற கல்லூரிக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.. 800 மீட்டர், 1000 மீட்டர்னு ஓட்டப்போட்டிகள்ல தேசிய அளவுல சாந்தி படைச்ச சாதனையை பாராட்டி 2004ல அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தடகள வீராங்கனை சாந்திக்கு 1 லட்சம் பரிசுத்தொகையா வழங்கி பாராட்டுனாங்க.. சாந்தியோட திறமைக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு அது..
2005ம் வருஷம் சாந்திக்கு தென்கொரியாவுல நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புல பங்கேற்குற வாய்ப்பு கிடைச்சுச்சு. அந்த போட்டியில சாந்தி வெள்ளிப்பதக்கம் ஜெயிச்சு அசத்துனாங்க.. 2006ல தெற்காசிய விளையாட்டுப் போட்டியில விளையாட சாந்திக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு.. 800 மீட்டர் பிரிவுல வெள்ளிப்பதக்கத்தை ஜெயிச்சாங்க.. அதே தெற்காசிய போட்டியில 1500 மீட்டர் பிரிவு, 4*400 மீட்டர் ரிலே பிரிவுல தங்கப்பதக்கத்தை ஜெயிச்சு எல்லோரையும் திரும்பி பாக்க வைச்சாங்க.. இந்த போட்டிக்கு முன்னாடி 2005ல பாங்காங்-ல நடந்த ஆசியன் இன்டோர் கேம்ஸ்ல 800 மீட்டர் பிரிவுலயும், 4*400 மீட்டர் ரிலே பிரிவுலயும் தங்கத்தை ஜெயிச்சாங்க.. இப்படி நாட்டுக்காக பல போட்டிகள்ல விளையாடி தங்கத்தையும், வெள்ளியையும் ஜெயிச்ச சாந்தி இந்தியாவுக்காக 12 சர்வேசத பதக்கங்களை ஜெயிச்சுருக்காங்க..
2006ம் வருஷம் தோஹாவுல நடந்த ஆசியம் கேம்ஸ்ல விளையாட சாந்திக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு.. 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல வெறும் 3 நொடிகள்ல தங்கம் வெல்லும் வாய்ப்பை சாந்தி தவறவிட்டாங்க.. 800 மீட்டர் தூரத்தை வெறும் 2 நிமிஷம் 3.16 செகண்ட்ஸ்ல சாந்தி கிராஸ் பண்ணுனாங்க.. வெள்ளிப்பதக்கத்தை ஜெயிச்ச சாந்திக்கு அதுக்கு அப்புறம் மிகப்பெரிய சோதனைகள் தான் வந்துச்சு.. பாலின பரிசோதனையில அவங்க பெண் இல்லனு சொல்லி அவங்களோட வெள்ளிப்பதக்கத்தை திரும்ப வாங்கிட்டாங்க..
இது சாந்திக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துச்சு.. ஊருக்கு திரும்புன சாந்திக்கு ஏகப்பட்ட சோதனைகள்.. விளையாட்டு வீரர்கள் எப்பவும் தங்களோட தன்னம்பிக்கை மூலமா கம் பேக் கொடுக்குற மாதிரி சாந்தியும் பல போராட்டங்களுக்கு பிறகு 2016ம் வருஷம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தோட நிரந்தர பயிற்சியாளரா நியமிக்கப்பட்டாரு.. அப்போ “ இந்த பதக்கங்கள் அனைத்தும் என்னுடைய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கான அடையாளங்கள். முழு நம்பிக்கை மற்றும் பலத்தோடு என்னுடைய குரலை உயர்த்திச் சொல்வேன். நான் பெண்ணாகத்தான் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன்.” அப்படினு கம்பீரமா சாந்தி சொன்னாங்க..
சாந்தியோட பயிற்சிக்கு கீழ இப்போ ஏராளமான தரமான வீரர்கள் உருவாகிட்டு வர்றாங்க.. இன்னைக்கும் தமிழ்நாட்டுல இருக்குற பல விளையாட்டு வீராங்கனைகளுக்கு சாந்தி சவுந்திரராஜன் ஒரு உத்வேகமாகவும், உதாரணமாகவும் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க : Untold Stories 14: மும்பை முதல் ஒலிம்பிக் வரை..! இந்தியாவின் முதல் தடகள லேடி சூப்பர் ஸ்டார்!
மேலும் படிக்க : Untold Stories Episode 13 : வாழ்வை முடக்கிய விபத்து..! துப்பாக்கித் தந்த புதுவாழ்வு..! அக்னிப்பறவையாய் மாறிய அவனிலேகரா..!