சுரேஷ்
கிருஷ்ணா இயக்கத்தில் , ரஜினிகாந்த் , குஷ்பு நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை . இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. ஏழை , பணக்கார நண்பர்களிடையே ஏற்படும் விரிசலும் , அதனால் பாதிக்கப்படும் ஏழை நண்பன் எப்படி தான் விடுக்கும் சவாலில் ஜெயித்து காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் . அண்ணாமலை படத்தின் திரைக்கும் பின்னால் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருக்கிறது. அதனை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் :
அண்ணாமலை திரைப்பம் 1987 ஆம் ஆண்டும் இந்தியில் வெளியான Khudgarz என்னும் படத்தின் ரீமேக். Khudgarz திரைப்படம் ஜேர்ஃபி ஆச்சரின் Kane and Abe என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் . ஆனால் Khudgarz திரைப்படத்திலிருந்து அண்ணாமலை திரைப்படம் மாறுபட்டது, கதாநாயகனின் கேரக்டரில்தான், ஏனென்றால் அந்த படத்தில் ஹீரோ பணக்காரார். அண்ணாமலை திரைப்படத்தில் ஹீரோ ஒரு பால்காரர்.
மூன்று இயக்குநர்களை சந்தித்த ‘அண்ணாமலை’:
முதலில் இந்த திரைப்படத்தை முதலில் விசு இயக்க ஒப்பந்தமானார் அவர் முரண்பாடுகளால் விலகவே அடுத்ததாக வசந்த் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகுதான் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
”இளையராஜா வேண்டாம் “ - பாலச்சந்தர்.
அண்ணாமலை திரைப்படத்தை ரஜினியின் குருவான கே.பாலச்சந்தர் தனது மனைவியுடன் இணைந்து தயாரித்திருந்தார். எப்போதுமே இளையராஜாவை இசையமைப்பாளராக தேர்வு செய்யும் பாலச்சந்தர் , இந்த படம் எடுக்கப்பட்ட சமயத்தில் இருந்த மனக்கசப்பு காரணமாக தேவாவை ஒப்பந்தம் செய்தார். தேவா - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் அண்ணாமலை.
முதல் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்ட்:
இந்த படத்தில்தான் ரஜினிகாந்திற்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அதனை விரும்பவில்லை. அந்த காலக்கட்டத்தில் இந்த பட்டம் தனக்கு அதிகம் என எண்ணி வெட்கப்பட்டாராம் . ஆனால் பாலச்சந்தர்தான் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். டைட்டில் கார்டுக்கு பின்னணி இசை கொடுத்தவர் தேவா. அதனை பீட் செய்ய இன்னும் எந்தவொரு இசைக்கலைஞராலும் முடியவில்லை.
பிரபுதேவாவின் பங்கு :
அதே போல தேவா இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘வந்தேன் டா பால்காரன் ” பாடலுக்கான ட்யூனை மராத்தி பாடலான “மீ டோல்கர் தர்யாச்சா ராஜாவை” என்னும் பாடலில் இன்ஸ்பெயர் ஆகி எடுத்திருந்தார். வந்தேன் டா பால்காரன் திரைப்படத்திற்கு நடன இயக்குநர் பிரபுதேவா .
வசனம் எழுதிய நடிகர் :
வெறும் 45 நாட்களில் எடுக்கப்பட்ட அண்ணாமலை திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கரகாட்டக்காரன் திரைப்பட புகழ் சண்முக சுந்தரம்.