டோக்கியோ பாராலிம்பிக்கில் தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் ஷரத் குமாருக்கு வெண்லகப் பதக்கமும் கிடைத்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் மாரியப்பன்.
இன்றைய போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, நொய்டாவைச் வருண் சிங் பாட்டி, பீகாரைச் சேர்ந்த ஷரத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி-42 பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்திய வீரர்கள். ஆனால், பாராலிம்பிக்கில் இம்முறை டி-63 வகை தொடரில் டி-42 பிரிவில் போட்டியிடும் வீரர்களையும் சேர்த்து நடத்தினர்.
போட்டி தொடங்கியவுடன், மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகிய இருவரும் 1.73 மீ, 1.77 மீ, 1.80 மீ, 1.83 மீ தூரங்களை முதல் வாய்ப்பிலையே தாண்டி க்ளியர் செய்தினர். பதக்கத்திற்காக இரு இந்திய வீரர்கள் இடையே கடும்போட்டி நிகழ்ந்தது. போட்டியின் நடுவே மழை வேறு குறிக்கிட்டதால் வீரர்கள் முழுமையாக சிறப்பாக செயல்பட முடியாத நிலைமை இருந்திருக்கலாம்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், 1.86 மீட்டர் தூரத்தை மூன்றாவது வாய்ப்பில் மாரியப்பன் க்ளியர் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேவ் சாமுக்கும் மாரியப்பனுக்கும் சவாலான போட்டி இருந்தது. ரியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் 1.89 மீ தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 1.88 மீட்டர் தூரத்தை அமெரிக்க வீரர் க்ளியர் செய்த்ததால், மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.மற்றொரு இந்திய வீரரான ஷரத் 1.83 மீட்டர் தூரம் க்ளியர் செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.