இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக உலா வந்தவர் பியூஷ் சாவ்லா. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களிலும் இந்திய அணிக்காக ஆடியுள்ள இவர் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 உலகக்கோப்பையை வென்றவர்:

பியூஷ் சாவ்லா 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஆடியவர். இவர் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்காக கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் ஆடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

தனது ஓய்வு குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக களத்தில் இருந்த பிறகு அழகான விளையாட்டில் இருந்து விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

உலகக்கோப்பை வெற்றி:

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற அணியில் ஒரு அங்கமாக இருந்தது வரை இந்த நம்ப முடியாத பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஆசிர்வாத்திற்கு எந்த குறையும் இல்லை. இந்த நினைவுகள் என்றென்றும் என் இதயத்தில் பதிந்திருக்கும். 

என் மீது நம்பிக்கை வைத்த ஐபிஎல் உரிமையாளர்களான பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. என் வாழ்க்கையில் உண்மையில் ஒரு சிறப்பு அத்தியாயமாக ஐபிஎல் இருந்து வருகிறது. அதில் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். 

உணர்ச்சிப்பூர்வமான நாள்:

ஒரு கிரிக்கெட் வீரராக என்னை வளர்த்து வடிவமைத்த எனது பயிற்சியாளர்களான கே கே கெளதம், மறைந்த பங்கஜ் சர்ஸ்வத் ஆகியோருக்கு நன்றியுடன் கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து வகையான சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நாள்.

நான் கிரீசை விட்டு விலகியிருந்தாலும், கிரிக்கெட் எப்போதும் எனக்குள் வாழும்.  இந்த  அழகான விளையாட்டின் உணர்வை என்னுள் சுமந்துகொண்டு ஒரு புதிய பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

இவ்வாறு அவர் உருக்கமாக எழுதியுள்ளார். 

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்தியா ஏ, இந்தியா ரெட், இந்தியா பி, இந்தியா கிரீன், ரெஸ்ட் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் ஜோன்,  உத்தரபிரதேசம் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். மேலும், சஸ்ஸெக்ஸ், சோமர்செட், சேம்ப்லாஸ்ட், ஆல் ஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் ஆடியுள்ளார். 

தன்னுடைய பதின்ம வயதிலே இந்திய அணிக்காக அறிமுகமானவர். முதல் தர கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலே சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக கூக்ளி வீசி அறிமுகமானார். இவரது முதல் உள்நாட்டு தொடரிலே அவர் உத்தரபிரதேச அணிக்காக 35 விக்கெட்டுகளையும், 224 ரன்களையும் எடுத்து அசத்தினார்.  

முதல்தர கிரிக்கெட்டில் பியூஷ் சாவ்லா 137 போட்டிகளில் 235 இன்னிங்சில் பந்துவீசி 446 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 164 போட்டிகளில் 254 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளைச் சேர்த்து மொத்தமாக 1000 விக்கெட்டுகளை பியூஷ் சாவ்லா வீழ்த்தியுள்ளார்.