பெங்களூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த காமாட்சி தேவி

ஆர்.சி.பி அணி  ஐ.பி.எல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரில் வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டதால் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிலைய்ல் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவி என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று தமிழ்நாடு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

விராட் கோலியின் தீவிர ரசிகை

காமாட்சி தேவி குறித்து அவரது அலுவலக நண்பர் பகிர்ந்துகொண்டுள்ளார். "காமாட்சி ஒரு தீவிரமான ஆர்.சி.பி மற்றும் விராட் கோலி ரசிகை. பெங்களூரில் நடக்கும் எல்லா ஆர்.சி.பி ஆட்டத்தையும் தவறாமல் போய் பார்த்துவிடுவார். வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மக்களை அனுமதிக்கிறார்கள் என்றதும் அவர் ஆன்லைனில் முயற்சி செய்தார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை என்றது மைதானத்திற்கு புறப்பட்டு செல்ல முடிவெடுத்தார். அலுவலகத்தில் மேனேஜரிடம் அனுமதி கேட்டு நச்சரித்து கிளம்பினார். கடைசியாக கூட்டம் அதிகம் இருப்பதால் மெட்ரோவில் செல்வதாக தனது நண்பருக்கு மெசேஜ் செய்துள்ளார். இதுதான் அவர் கடைசியாக அனுப்பிய மெசேஜ். காமாட்சியின் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை தெரிவித்தார்கள். அவரது லேப்டாப் இன்னும் அவர் இடத்தில் திறந்தே கிடக்கிறது" என காமாட்சி தேவி பற்றி பேசினார்கள் "

ஆர்.சி.பி நிர்வாகிகள் கைது

போதிய பாதுகாப்பு திட்டமில்லாமல் இந்த நிகழ்வை நிர்வகித்த ஆர்.சி.பி நிர்வாகிகள் மற்றும்  DNA என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை போலீசார் இன்று(06.06.25) கைது செய்தனர். RCBயின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் தலைவர் நிகில் சோசலே, DNA என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த சுனில் மேத்யூ மற்றும் கிரண் குமார் ஆகியோருடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் என்பதை காவல் துறையின் PTI வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆர்சிபி, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) ஆகியவற்றின் பிரதிநிதிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த கைதுகள் நடந்துள்ளன. இந்த துயரத்திற்கு வழிவகுத்த "பொறுப்பின்மை" மற்றும் "மொத்த அலட்சியம்" காரணமாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் கொலைக்கு சமமாகாத குற்றச்சாட்டாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.