டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 24-ம் தேதி தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர்.
வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பாராலிம்பிக் தளத்திற்கு முன்னேறியிருக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனையின் பயணமுமே உத்வேகம் நிறைந்தது, நம்பிக்கை அளிக்க கூடியது. அந்த வரிசையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் இப்ராஹிம் ஹாமட்டு தனது தனித்துவமான விளையாட்டு பாணியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்ராஹிம் ஹாமட்டுக்கு வயது 48! இந்த வயதிலும் தனது ஒலிம்பிக் கனவை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அசத்தி கொண்டிருக்கிறார்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
10 வயதில் ஏற்பட்ட இரயில் விபத்தின் காரணாமக தனது இரண்டு கைகளையும் இழந்தவர், இன்று வாயைப் பயன்படுத்தி டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். காலைத் தூக்கி சர்வ் செய்கிறார். சர்வதேச பாரா டேபிள் டென்னிஸில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இப்ராஹிம், 2016 ரியோ பாராலிம்பிக்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
க்ளாஸ் 6 பிரிவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் தனிநபர் போட்டியில் விளையாடி வரும் அவர். ரியோ பாராலிம்பிக்கில் ஆறாவது இடத்தில் நிறைவு செய்தார். 31வது வயதில் சர்வதேச விளையாட்டுகளில் முதலில் அறிமுகமானார், தனது 43வது வயதில் பாராலிம்பிக்கில் போட்டியிட்டார்.
30 வயதை கடந்தாலே, இன்னொரு வாய்ப்பு இல்லை என நினைத்து கொண்டிருக்கும் பெரும்பாலானோருக்கு மத்தியில், 30 வயதில் தனது பயணத்தை தொடங்கி அடுத்த 15 வருடங்களில் தனது சாதனை கனவை துரத்தி ஓடி வந்துள்ளார். இன்னும் பல ஆண்டுகள் அவர் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும், பதக்கங்களை வென்று குவிக்க வேண்டும். ஆனால், பாராலிம்பிக் பார்ப்பவர்களின் கோரிக்கை எல்லாம் இது மட்டும்தான், இப்ராஹிம் பதக்கம் வெல்லைவில்லை என்றாலும் பரவாயில்லை அவர் விளையாடுவதை பார்ப்பதிலேயே உற்சாகம்தான் என்று! அனைவரது மனதை வென்றுவிட்டார், நம்பிக்கையை விதைத்துவிட்டார்! அசத்துங்கள் இப்ராஹிம்!