டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கின. இந்த தொடர் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
நேற்று இரவு டோக்கியோவில் வண்ணமையமான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க விழாவில், இந்தியாவின் தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் டெக் சந்த் ஏந்திச் சென்றார். இந்நிலையில், இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.
பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்தியா 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இம்முறை முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான வீரர் வீராங்கனைகளை இந்தியா டோக்கியாவுக்கு அனுப்பியுள்ளது. இதனால், பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8-12 பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
இந்த பாராலிம்பிக் தொடரில் கவனிக்க வேண்டிய இந்திய வீரர் வீராங்கனைகள் யார்? ஒரு ரீகேப்!
மாரியப்பன் தங்கவேலு:
ரியோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றபோது மாரியப்பனுக்கு வயது 22. இந்த நான்கு வருடங்களில் விளையாட்டில் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார் மாரியப்பன். கடந்த முறை, டி-42 பிரிவில் பங்கேற்ற அவர் 1.89 மீ தூரம் தாண்டினார். அவரது சாதனையை அவரே முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏக்தா பியான்
ஹரியானாவைச் சேர்ந்த 36 வயதான ஏக்தா பியான், க்ளப் த்ரோ விளையாட்டில் பங்கேற்கிறார். தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ள அவருக்கு ஒலிம்பிக் பதக்கமும் கைக்கூடும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவேந்திர ஜஜாரியா:
இந்தியாவின் பாராலிம்பிக் வீரர்களில் மிகவும் பரிச்சயமான பெயர் தேவேந்திர ஜஜாரியா. தனது 40+ வயதில் பாரலிம்பிக் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளார். ரியோவில் பதக்கம் வென்ற வீரரான இவர், ஈட்டி எறிதல் போட்டியில் இம்முறையும் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.
வருண் சிங் பாட்டி
2016 ரியோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் டி-63 ப்ரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். 2016,2017 ஆண்டுகளில் நடைபெற்ற பாரா தடகள போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அவர், இம்முறை நிச்சயம் பதக்ம் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளார்.
சுமித் அண்டில்
உலக ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப்பில் ரெக்கார்டு ப்ரேக்கிங் த்ரோ எறிந்த சுமித், பாராலிம்பிக் போட்டியில் தனது சிறப்பை வெளிப்படுத்துவார் என தெரிகிறது. சுமித் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி.
ப்ரமோத் பகத்
பாரா பேட்மிண்டன் உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ப்ரமோத் பகத், உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர். ஒடிசாவைச் சேர்ந்த 33 வயதான ப்ரமோத், தனது முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வெல்ல காத்திருக்கிறார்.
அவானி லெகாரா
2012-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தால், முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மீண்டு எழுந்த அவர் 2017-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தடம் பதித்தார். தற்போது, ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சிங் குர்ஜார்
ஈட்டி எறிதல் போட்டியில், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்க வேண்டிய வீரர். போட்டி தளத்திற்கு 52 நொடிகள் தாமதமாக சென்றதால், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 25 வயதான சுந்தர் சிங், இம்முறை கிடைத்த வாய்ப்பை நழுவவிட மாட்டார் என தெரிகிறது.
Paralympics Medal Winners: பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை பெற்ற பதக்கங்கள் - ஒரு ரீவைண்ட்..!