டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகி உள்ள மதுரை சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தாய் , தந்தையை இழந்த ரேவதியை அவரது பாட்டி ஆரம்மாள் வளர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ரேவதியின் பாட்டி ஆரம்மாளிடம் பேசினோம்... , ‛‛சின்னப் பிள்ளையா இருக்கும் போதே ரேவதியையும், அவளது தங்கச்சியும் விட்டுவிட்டு அவங்க அப்பா, அம்மா இறந்து போய்டாங்க. அவங்க இல்லாத நிலைமைல தான் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சேன். அவள் ஓட்ட போட்டியில் கலந்து கொள்ளும் போது நான் வேண்டாம்னு சொன்னேன். பொம்பள பிள்ளை ஓடும் போது கீழே விழுந்து அடிப்படும். இதலாம் வேணாம்த்தானு சொன்னே. அவளது திறமையை பார்த்துட்டு அவளோட கோச்சு சார் கண்ணன் அதிகமாக விளையாட வச்சாரு. ரேவதி இந்த மைதானத்தில் வெறும் காலில் தான் ஓடினாள். சூ வாங்கக் கூட என்னிடம் வசதி கிடையாது. எல்லாம் கண்ணன் சார் தான் சூ வாங்கி கொடுத்து அவளை இந்தளவுக்கு கொண்டு வந்தார். கண்டிப்பா என்னுடைய பேத்தி எல்லா போட்டியிலையும் ஜெயிச்சு பெயர் எடுத்துக் கொடுப்பா" என்றார் நெகிழ்ச்சியாக
மேலும் செய்திகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும் - மதுரை : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மீனாட்சியம்மன் கோவிலில் மகிழ்ச்சியுடன் பக்தர்கள்..!
மேலும் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன்...," ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மன நிறைவை தந்துள்ளது. மதுரையிலிருந்து முதல் பெண்மணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மதுரை மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமையாக உள்ளது. ரேவதி பிளஸ்2 படிக்கும் போதில் இருந்து மண்டல அளவிலான தடகள போட்டியில் காலில் சூ இல்லாமல் தடகள போட்டியில் கலந்து கொண்டுள்ளார். காலில் சூ இல்லாத நிலையிலும் திறமையுடன் விளையாடி பரிசுகளை தட்டியுள்ளார்.
அதனை பார்த்து அவரிடமும் அவரை வளர்த்து வந்த பாட்டியிடம் பேசி பயிற்சி அளிக்கபட்டது. கல்லூரி அளவிலான 100 மீட்டர், 400 மீட்டர் தடகள போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து ஆசிய அளவிலான தடகள போட்டியில் 4வது இடம் பிடித்தார். தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் பயிற்சி எடுத்ததால் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு சாதனையாளருக்கு பின்னணியில் ஒரு முள்படுக்கை இருக்கும். ரேவதிக்கு மட்டும் பஞ்சு மேத்தையா இருக்கப்போகிறது. அவர் இன்னும் பல சாதனைகளை தட்டட்டும்.
மேலும் படிக்க -’75 நாட்கள் காத்திருப்பு’ திறந்தது கொடைக்கானல்..!