இன்சூரன்ஸ் எடுப்பதில் நம் நாட்டில் பெண்கள் தனிப்பட்ட முறையில் இன்னும் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவர்கள் எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசியிலேயே தங்களுக்கும் கவர் ஆகிவிடும் என்று சொல்லி இன்சூரன்ஸை தவிர்த்து விடுகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்காகவே பல சிறப்பான இன்சூரன்ஸ் திட்டங்களைப் பல்வேறு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.


அவற்றின் தொகுப்பு இதோ..!


ஹெச்டிஎஃப்சி ஸ்மார்ட் வுமன் ப்ளான்:
ஹெச்டிஎஃப்சி ஸ்மார்ட் வுமன் ப்ளான் இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.24000 சந்தாவாக செலுத்த வேண்டும். அவ்வாறாக செலுத்தப்படும் தொகையில் 4 ரிட்டர்ன் திட்டங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 1. Income Fund 2. Balanced Fund 3. Blue-chip Fund 4. Opportunities Fund என்று நான்கு ஆப்ஷன்கள் உள்ளன. இது எது உங்களுக்கு சிறந்ததாக இருக்குமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது இந்த இன்சூரன்ஸ் கவரேஜை பிரசவத்துகாக, பெண் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் சிகிச்சைக்காக, கணவரின் மறைவு என மூன்றுவித பிரச்சினைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


டாடா ஏஐஜி வெல்சூரன்ஸ் வுமன் பாலிஸி:
டாடா குழுமம் அறிவித்துள்ள இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், 11 விதமான நோய்களுக்கு கவரேஜ் பெறலாம். இதில் செலுத்தப்படும் இன்சூரன்ஸ் தொகை மொத்தமாகக் கிடைக்கும். இன்சூரன்ஸி கவராகும் 11 விதமான நோய்களில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகை வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விபத்தால் ஏற்படும் காயங்களை சரி செய்ய மட்டும் காஸ்மடிக் சர்ஜரி இந்த இன்சூரஸில் கவராகும். ஆனால், எச்ஐவி போன்ற பால்வினை நோய்கள் இந்த இன்சூரன்ஸில் கவர் ஆகாது. அதேபோல் பிரசவம், கருக்கலைப்பு, மலட்டுத்தன்மை சிகிச்சையும் கவர் ஆகாது.


பஜாஜ் அலயன்ஸின் பெண்கள் நல இன்சூரன்ஸ் திட்டம்:
தீவிர நோய்களுக்கு எதிரான சிகிச்சைக்கு பஜாஜ் அலயன்ஸின் பெண்கள் நல இன்சூரன்ஸ் திட்டம் பெரும் பயனளிப்பதாக இன்சூரன்ஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இணையும்போது 80டி வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கும் பெற முடியும். 21 வயது முதல் 65 வயதுவரையிலுள்ள பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை உள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறும் பெண்ணுக்கு நிரந்தர பிறவிக் குறைபாட்டுடன் குழந்தை பிறந்தால். இன்சூரன்ஸ் தொகையில் 50% திருப்பிச் செலுத்தப்படும். இருப்பினும், முதல் இரண்டு குழந்தைகளுக்குத் தான் இந்தச் சலுகை பொருந்தும். தீவிர உடல்நலக் குறைபாட்டால் பணியிழக்க நேர்ந்தால், அவர்களுக்கு ரூ.25000 இழப்பீடாக வழங்கப்படும்.


ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிஸி:
ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிஸி, பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. பெண் குழந்தைக்கோ அல்லது தனித்து வாழும் பெண்ணுக்கோ 5% ப்ரீமியத்தில் சலுகை உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இந்த இன்சூரன்ஸ் திட்டம் சிறந்தது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ரூ.3 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.9 லட்சம் பிரீமீயத்திலும், ரூ.12 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.18 லட்சம் பிரீமீயத்திலும் உள்ளது.


ஜீவன் பாரதி 1:
இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் காப்பீடு செய்து கொள்ளலாம். பதினைந்து ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.


இந்த காப்பீடு திட்டத்தில் சேரும் பெண்கள், வருடத்திற்கு ஒரு முறை காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தவணை முறையில் செலுத்த விரும்பினால், அடுத்த வருடத்திற்கான கட்டணத்தை மூன்று தவணைகளில் செலுத்தலாம். இவ்வாறு முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சலுகையும் வழங்கப்படும். முதல் இரண்டு வருடங்கள், காப்பீடு கட்டணம் செலுத்தி, பிறகு செலுத்தாவிட்டாலும் கூட, அடுத்த மூன்று வருடங்களுக்கு காப்பீடு தொடரும். அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை வழங்கப்படும்.