தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மலைவாசஸ்தலங்களான நீலகிரி, கொடைக்கானல், குற்றலாம்உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது, இதனையடுத்து கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன,இதில் குறிப்பாக மாவட்டம் விட்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையை தமிழக அரசால்  ரத்து செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில்  கொரோனா தொற்று குறைந்து வரும் இரண்டாம் நிலை மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள்  காலை முதலே ஆர்வத்துடன் வர தொடங்கியுள்ளனர். கேளிக்கை விடுதிகள், பூங்காக்களுக்கு செல்ல தமிழ அரசு தளர்வுகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில், கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடி அருகில்  உள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி அருவியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.  பூங்காக்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், கொடைக்கானல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், 75 நாட்கள் சுற்றுலா செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு இப்போது ஆறுதல் கிடைத்துள்ளது. குறிப்பாக, பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம்  எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்தும் சுற்றுலா பயணிகளின் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து கொண்ட பிறகே பூங்காவிற்குள் செல்ல பூங்கா நிர்வாகத்தினர் அனுமதிக்கின்றனர். கடந்த 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற தினங்களில் கொடைக்கானலுக்கு பேருந்துகளில் செல்வோர்கள், தனியார் வாகனங்களில் செல்வோர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி கொடைக்கானலுக்குள் வெளியூர்களிலிருந்து வருவோர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கொடைக்கானலுக்கு இ பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் செல்கின்றனர்.


கொடைக்கானலில் உள்ள மூன்று பூங்காக்களையும் கழுகு பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பார்க்க ரம்யமாக உள்ளது.


கொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா? இதோ அதற்கு ஒரு வழி!