தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த தளர்வில் கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் சில மாவட்டங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. கடந்த 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளின்படி, தமிழ்நாட்டில் இன்று காலை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி திருக்கல்யாண தினத்தன்று பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (05-07-2021) மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.
காலை 6 மணி முதல் தரிசனம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோயிலின் உள்ளே செல்வதற்காக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது. பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய், பழம், கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை .
"திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும், 10 வயதுக்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் , மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளதால் மிகவும் ஆனந்தமாக சுவாமி தரிசனம் செய்தோம். கொரோனா தொற்று போன்ற நோய்நொடிகள் இல்லாமல் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்” என்றனர் பக்தர்கள்.
மேலும் மதுரை அழகர்கோயில் கோவில் நிர்வாகத்திடம் பேசினோம். "அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று முதல் திருக்கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதே போல் பக்தர்கள் திருக்கோயில் தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கங்கை தீர்த்தம் நீராட அனுமதி இல்லை. கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபட அனுமதி வழங்கப்படவில்லை" என தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !