இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. ஜூன் 18ம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணியை சவுதாம்ப்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய ஆடவர் அணியுடன் இம்முறை இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து பயணம் செய்துள்ளனர், ஜூன் 16ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர்கள் பங்கேற்கின்றனர்.






முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் மும்பையில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு கடந்த ஜூன் 2ம் தேதி மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து வந்தடைந்துள்ளனர்.






இங்கிலாந்து சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர் கே.எல் ராகுல், வந்திறங்கி விட்டோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்திய அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இருவருமே, இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானத்தின் ஹில்டன் ஏஜியஸ் பவுல் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு மீண்டும் சிறிது காலம் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும், அதன் பிறகே இந்திய அணி வீரர்கள் பயிற்சியை துவங்க உள்ளனர்.






இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள ஹில்டன் ஏஜியஸ் பவுல் ஹோட்டலில் இருந்து மைதானத்தின் அற்புதமான பார்வையை காண முடியும். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள ரிதிமான் சாஹா "நாங்கள் தங்கியுள்ள அறையில் இருந்து காணும் காட்சி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்றுள்ளார்.


மேலும் அறிய :ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!


இந்திய அணி இம்முறை 20 வீரர்கள் அடங்கிய மிக பெரிய அணியுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நிறைவடைந்தவுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்குகிறது. செப்டம்பர் 14ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் நிறைவடையும் நிலையில், அங்கிருந்து புறப்படும் இந்திய அணி வீரர்கள் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.