இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 29 லீக் போட்டிகளுடன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிசிசிஐ முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தற்போது UAE-இல் ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர். 






மேலும் ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன. ஹோட்டல்கள் புக்கிங் செய்வது, இங்கிருந்து அங்கு சென்று சேர்வதற்கான பயண திட்டம் ஆகியவை தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 3-வது வாரத்தில் ஐபிஎல் அணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏனினும் எப்போது புறப்படலாம், என்ன மாதிரியான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.



இதில் ரசிகர்களுக்கு மிக பெரிய கவலையே வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் தொடரில் பங்கேற்பார்களா என்பதே. ஏனென்றால் ஐபிஎல் தொடர் நிறைவடைந்தவுடன் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது, அதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் மிக பெரிய சிக்கல் நிலவி வருகிறது. இது குறித்து மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களுடன் ஆலோசனை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அணைத்து முயற்சிகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.


மேலும் அறிய : இங்கிலாந்தில் வெல்வது மட்டுமே இறுதி எல்லையில்லை - விராட் கோலி


மேலும் ஏற்கனவே 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற்றது, அதனால் அணிகளுக்கு இது புதிதல்ல. பெரும்பாலும் கடந்த ஆண்டு எந்தெந்த அணிகள் எந்த ஹோட்டலில் தங்கியதோ, அதே ஹோட்டலில் மீண்டும் தங்க ஏற்பாடுகள் செய்கின்றன. காரணம் ஏற்கனவே பையோ பப்பிள் சூழலை கையாள அந்த ஹோட்டல் நிர்வாகிகள் பழகி இருப்பார்கள் என்பதே. 



இது குறித்து அணியின் நிர்வாகி ஒருவர் "கடந்த வருடத்தை பார்த்தோமானால், செப்டம்பர் 19ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடருக்கு ஆகஸ்ட் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டோம், அதே நிலை தான் தற்போதும். ஹோட்டல் நிர்வாகத்துடன் பேசி வருகிறோம், ஆகஸ்ட் 3வது வாரத்தில் துபாய் புறப்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 19 அல்லது 20-ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டு, அக்டோபர் 10-ஆம் தேதி இறுதி போட்டி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.