கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி அதிக பாதிப்புகளை சந்தித்த டெல்லி தற்போது மீண்டு  வருகிறது.  முழு ஊரடங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் என கொரோனாவை கட்டுப்படுத்தியது டெல்லி. தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஃபாபிஃப்ளூ  என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதிக தேவை காரணமாக இந்த மருந்துக்கு டெல்லியில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் ஃபாபிஃப்ளூ மருந்து தட்டுப்பாடே இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஒரு மருந்துக்கு டெல்லியே அலைந்துகொண்டிருக்கும் நிலையில் கவுதம் கம்பீருக்கு மட்டும் தாராளமாக எப்படி கிடைக்கிறது என அதிர்ச்சி அடைந்த தீபக் சிங் என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 




இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து உரிய அறிக்கை வேண்டுமென டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டது.மே 31ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம். அறிக்கையை பார்த்து கோபமடைந்த நீதிமன்றம், இந்த அறிக்கையால் பயனில்லை.  எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை.  ஒரே நேரத்தில் ஒருவரால் எப்படி நிறைய மருந்துகளை வாங்க முடியும்? இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இருக்கிறது.  நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எங்கள் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள். விளைவு பயங்கரமாக இருக்கும் என கொந்தளித்தது நீதிமன்றம். இதனையடுத்து கவுதம் கம்பீர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என  டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.




கருணைக் கொலை கேட்டு வந்த தாய்; மடியிலேயே மரணித்த மகன்!




இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கூலாக ''நான் ஒரு மனிதன், மனிதகுலத்தை பாதிக்கும் அனைத்தும் என்னைப் பற்றியது'' என்ற பகத்சிங்கின் வார்த்தைகளை ட்வீட் செய்துள்ளார் கவுதம் கம்பீர். மேலும் தன்னுடைய விளக்கத்தில் இதுமாதிரியான பணிகளை தொடருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 




இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், மக்களுக்கு பிரச்னையை அவர்களே உண்டாக்கிவிட்டு அதனை சரிசெய்பவர்கள் போல அவர்களே மீண்டும் தோன்றுவது கண்டிக்கத்தக்கது. இது தொடரும் எனவும் தனிநபர் கூறுகிறார். இது தொடர்ந்தால் இதனை எப்படி கையாள்வது என நீதிமன்றத்துக்கு தெரியும் என காட்டமாக கூறியுள்ளது.  ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பாஜகவின் கவுதம் கம்பீர் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் எம் எல் ஏ பிரவீன் குமார் என்பவரும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




நிதி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் தொடர்ந்து கேரளம் முதலிடம்; தமிழகத்திற்கு 2-வது இடம்!