19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது.  இந்த விளையாட்டுப் போட்டிகள் 45 நாடுகளைச் சேர்ந்த 12, 400 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


முன்னதாக இந்த விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா நாளுக்கு நாள் பதக்கங்களையும் குவித்து வருகிறது. 


 


இச்சூழலில் 11 நாளான இன்று (அக்டோபர் 3) 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.


யார் இந்த வித்யா ராம்ராஜ்?






கோவையில் ஆட்டோ ஓட்டுநருக்கு மகளாக 1998 ஆம் ஆண்டு பிறந்தவர் வித்யா. இவருடன் பிறந்தவர் இவரது தங்கை நித்யா. இருவரும் இரட்டையர்கள். 


இவர்கள் 7 ஆம் வகுப்பு படித்த போது இவர்களது விளையாட்டுத் திறமையை அறிந்த இவரது பெற்றோர்கள் ஈரோட்டில் உள்ள பெண்கள் விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து விட்டனர்.


இவருக்கு பிடித்த விளையாட்டு ஹாக்கி தான். இவரது தங்கை நித்யாவுக்கும் ஹாக்கி என்றால் கொள்ளை பிரியம். 


அப்படி ஹாக்கி விளையாடி வந்த இவருக்கு தடகளத்தின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், தடகளம் விளையாடுவதை பழக்கப்படுத்திக்கொண்டார்.


இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வரையிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்  ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளார்.


அதன்பிறகு 400 மீட்டர் தடகளப் போட்டியில் இவரது கவனம் திரும்பியது.  கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 56.57 வினாடிகளில் வெற்றி பெற்றவர் தான் இந்த வித்யா.


அதோடு மட்டுமின்றி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பந்த நேரத்தை வெறும் 56.01 வினாடிகளில் கடந்தவர். 


அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11 ஆம் தேதி சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற “இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்” தடகளப் போட்டியில்  400 மீட்டர் தடைகளை தாண்டுதல் பிரிவில்,  55.43 வினாடிகளில் தடைகளை தாண்டி பி.டி, உஷாவின் சாதனையை நெருங்கினார். 0.01 வினாடி இடைவெளியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்ய முடியாமல் தவற விட்டார்.


 


 


 


இச்சூழலில் தான் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தார். இந்நிலையில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.


அதேபோல் இவரது தங்கை நித்யாவும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் விளையாடி அசத்தி  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: National Boyfriend Day: காதலர் தினம் தெரியும்! அது என்ன காதலன் தினம்? இப்படியும் சர்ப்ரைஸ் செய்யுங்க பெண்களே!


மேலும் படிக்க: Delhi Earthquake: தலைநகர் டெல்லியில் திடீர் நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு; பீதியில் மக்கள்..!