India vs Netherlands: இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மழையால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கேரளாவில் உள்ள திருவனந்த புரத்தில் அமைந்துள்ள க்ரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


இந்தியாவில் வரும் 5ஆம் தேதி முதல் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரை நடத்தும் இந்தியா தவிர்த்து மற்ற 9 நாடுகள் இந்தியாவிற்கு வந்து விட்டன. தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே 8 பயிற்சி ஆட்டங்கள் முடிந்த நிலையில், 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத தயாராக இருந்தன. இந்நிலையில் இந்த போட்டி டாஸ் போடுவதற்கு முன்னர் இருந்தே மழை பெய்து வருவதால், டாஸ் போடப்படாமல் போட்டி நேரம் கால நிலைக்கு ஏற்ப ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே திருவனந்த புர மைதானத்தில் இரண்டு பயிற்சி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு அந்த போட்டிகளும் மழையால் தடைபட்டது. குறிப்பாக முதல் போட்டியான தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி டாஸ் போடப்படாமலேயே கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின்னர் 23 ஓவர்களாக குறைப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த போட்டியும் முழுவதுமாக நடைபெறவில்லை. குறிப்பாக, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 23 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்திருந்தது.  அதன் பின்னர் மழை வரவே போட்டி முடிவு எட்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடர் மழையால் போட்டி ரத்து செய்யப்படுவதால் கேரளாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


வரும் 5ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்: 



  • நரேந்திரமோடி கிரிக்கெட் ஸ்டேடியம் (அகமதாபாத்)

  • ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம் (ஹைதராபாத்)

  • இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (தர்மசாலா)

  • அருண் ஜெட்லி ஸ்டேடியம் (டெல்லி)

  • எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் (சென்னை)

  • ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் (லக்னோ)

  • மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (புனே)

  • எம் சின்னசாமி ஸ்டேடியம் (பெங்களூரு)

  • வான்கடே ஸ்டேடியம் (மும்பை)

  • ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா). 


இந்திய அணி தனது முதல் போட்டியில் பலமான ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் 8ஆம் தேதி மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.