தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 6.2 என அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதால் அதன் அதிர்வலைகளால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திர பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு ஏற்பட்டது, இரண்டாவது நிலநடுக்கம் பிற்பகல் 2:51 மணிக்கு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா ஆகிய இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளும் அதிர்வுகளை சந்தித்துள்ளன.
மதியம் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3.27 மணிக்கு 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் உத்தரகாண்டில் சில நிமிடங்களுக்குப் பிறகு 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வலுவான நிலநடுக்கத்தின் மையம் உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்திற்கு தென்கிழக்கே 206 கிமீ தொலைவிலும், லக்னோவில் இருந்து 284 வடக்கேயும் இருந்தது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
"நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தயவுசெய்து உங்கள் கட்டிடங்களை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியே வாருங்கள், ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். யாரும் லிஃப்ட்டை பயன்படுத்த வேண்டாம்! ஏதேனும் அவசர உதவிக்கு 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்" என்று டெல்லி போலீஸ் ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா உள்ளிட்ட 30 மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களில், 5 மாவட்டங்களில் நடுக்கம் ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது என்று செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
கட்டிடத்தை விட்டு வெளியேறிய மத்திய அமைச்சர்
நில அதிர்வின்போது டெல்லியில் தனது அலுவலகத்தில் இருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேறினார்.