ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. 


கேலோ இந்தியா போட்டியில் அசத்தும் தமிழ்நாடு:


அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.


அதோபோல, ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு வீரர் சரண் 48.42 வினாடிகள் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கர்நாடகா மற்றும் தெலுங்கானா வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூஜா ஆர்த்தி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் மராட்டிய வீராங்கனை நிருபமா துபேயை 3-2 என்ற செட் கணக்கில் பூஜா ஆர்த்தி வீழ்த்தினார்.


விருதுகளை அள்ளி குவிக்கும் தமிழ்நாட்டு வீரர்கள்:


இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. 


சென்னை, மேலக் கோட்டையூரில் உள்ள உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.,யில் நேற்று சைக்கிள் பந்தயம் நடந்தது. பெண்களுக்கான 500 மீட்டர் 'டைம் டிரயல்' பிரிவில், துாத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை தமிழரசி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.


பெண்கள் அணிகளுக்கான 'டீம் ஸ்பிரின்ட்' போட்டியில் கோவையின் தமிழரசி, பூஜா ஸ்வேதா, தன்யந்தா, துாத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீமதி அடங்கிய தமிழக அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. ஆண்களுக்கான 'டீம் ஸ்பிரின்ட்' போட்டியில் தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றது.


இதையும் படிக்க: IND vs ENG Test: "அதுக்குத்தான் இருக்கேன்" ரோகித் சர்மாவுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டுள்ள மார்க் வுட்!