இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. இவர் தன்னுடைய மாறுபட்ட பந்துவீச்சு முறையின் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தார். அத்துடன் விக்கெட் வேட்டைய நடத்தி வந்தார். அவர் ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் திடீரென்று நேற்று சர்வதேச டி20 உள்ளிட்ட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


இந்நிலையில் லசித் மலிங்கா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்போதும் பந்துவீசுவதற்கு முன்பாக பந்திற்கு முத்தம் கொடுத்துவிட்டு தான் வீச  தொடங்குவார். இந்த முத்தத்திற்கு பின்பாக உள்ள காரணம் என்ன தெரியுமா? இந்த முத்தம் தொடர்பாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நேர்காணலில் பதில் அளித்திருந்தார். அதில்,"நான் எப்போதும் கிரிக்கெட் விளையாட்டின் மேல் அதிக மரியாதை கொண்டவன். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் பந்து மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதை வெளிப்படுத்தவே எப்போதும் நான் பந்தை முத்தமிட்டு தான் வீசுவேன்" எனக் கூறினார். 


 






லசித் மலிங்காவின் பந்து முத்தத்தை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த் ஆண்டு பதிவிட்டிருந்தார். அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஐசிசி கிரிக்கெட் விதிகளில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதாவது இனிமேல் வீரர்கள் பந்தில் எச்சில் உள்ளிட்டவற்றை வைக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர். இதை மேற்கோள் காட்டி சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "இனிமேல் இது மலிங்காவிற்கு கஷ்டமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவு அப்போது ரசிகர்களிடம் மிகவும் வேகமாக பரவியிருந்தது. 


 






இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான லசித் மலிங்கா கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில்  4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். 


மேலும் படிக்க:உன் வயசு என்ன?-டிராவிட் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன தீபக் சாகர் !