ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிய எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல் இருக்கும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இந்தப் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். ஏற்கெனவே முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்து உள்ளது. ஆகவே அந்தத் தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியின் வீரரான தீபக் சாஹர் இலங்கை தொடரின் போது அவருக்கும் பயிற்சியாளராக இருந்த டிராவிட்டிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் தொர்பாக மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் செனல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், "இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்தப் போது அந்த தொடருக்கான பயிற்சியாளார் ராகுல் டிராவிட் என்னிடம் பேசினார். அவர் முதலில் என்னை பார்த்து உன்னுடைய வயது என்ன? என்று கேட்டார். நான் அதற்கு என்னுடைய வயது 28 எனக் கூறினேன். அதற்கு அவர், அது உன்னுடைய உண்மையான வயதா அல்லது கிரிக்கெட்டிற்கான வயதா என்று கேட்டார்.
நான் இல்லை சார் என்னுடைய உண்மையான வயது தான் அது என்று கூறினேன். அதன்பின்னர் அவர் என்னுடைய ஆட்டத்தை பார்த்துவிட்டு உன்னிடம் நிச்சயம் 4-5 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிக்கான திறமை உள்ளது என்று கூறினார். மேலும் நான் எப்போது எல்லாம் டிராவிட் தலைமையில் விளையாடினாலும் அப்போது என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டும் சிறப்பாக அமையும். அது இந்தியா ஏ அணிக்காக இருந்தாலும் சரி இந்திய சீனியர் அணிக்காக இருந்தாலும் சரி" எனக் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் தொடரிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தீபக் சாஹர் தன்னுடைய பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார். அதன்பின்னர் பேட்டிங்கில் அசத்திய தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக விளையாட பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ரசிகர்களுக்கு அனுமதி... சென்னை vs மும்பை... இது ஐபிஎல் அப்டேட்!