தெற்கு ரயில்வே அளவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டி செவ்வாய் மற்றும் புதன் (நவம்பர் 28, 29) ஆகிய இரு நாட்களில் மதுரையில் நடைபெறுகிறது. மதுரை ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர் நவீன ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை கோட்டங்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
துவக்க நாளான இன்று நடைபெற்ற போட்டிகளில் முதலில் மதுரை, சேலம் கோட்ட ஹாக்கி அணிகள் மோதின. இதில் மதுரை அணி 9 கோல் போட்டு அபார வெற்றி பெற்றது. மதுரை அணித்தலைவர் ரயில்வே மருத்துவமனை சுரேஷ் 4 கோல்களும், ஊழியர் நலத்துறை கண்காணிப்பாளர் பிரபு 3 கோல்களும், மற்ற விளையாட்டு வீரர்கள் மோகன் மற்றும் கார்த்திக் தலா ஒரு கோல் போட்டு சாதனை படைத்தனர். சேலம் அணி ஒரு கோல் மட்டுமே போட்டு தோல்வி அடைந்தது.
அடுத்து நடைபெற்ற சென்னை - திருச்சி அணிகளுக்கான போட்டியில் சென்னை அணி 6 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. திருச்சி அணி 2 கோல்கள் மட்டுமே போட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. முன்னதாக இந்த தெற்கு ரயில்வே அளவிலான ஹாக்கி போட்டிகளை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சி. செல்வம் துவக்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட தமிழக அரசு விளையாட்டு அதிகாரி முனைவர் கே.ராஜா கலந்து கொண்டார்.
ரயில்வே விளையாட்டு துறைக்கு பொறுப்பு வகிக்கும் கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி இசக்கி, ரயில்வே விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். புதன்கிழமை அன்று இறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா, தெற்கு ரயில்வே பெண்கள் நல அமைப்பின் மதுரை கோட்ட தலைவி பிரியா கிஷோர் அகர்வால் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்ட இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்து - மீட்பு பணியில் தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகளும், முடிவுகளும்