Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க,  தினசரி எடுக்கப்பட்ட முயற்சிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


உத்தரகாசி சுரங்க விபத்து:


உத்தரகாண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறும் பாதை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அந்த வகையில் கடந்த 12ம் தேதி முதல் நடந்த நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


பேரிடர் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் காலவரிசை: 



  • நவம்பர்-12: உத்தரகாண்டின் உத்தரகாசியில் தீபாவளி தினத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பிரம்ம்கால்-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சில்க்யாரா-தண்டல்கான் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் மீட்பு பணியை துவக்கியது. 

  • நவம்பர்-13: முதலமைச்சர் புஷ்கர் தாமி சம்பவ இடத்தை பார்வையிட்டார். சுரங்கத்தில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்காக குழாய் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

  • நவம்பர் - 14: 800 மற்றும் 900 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட எஃகு குழாய்கள் கிடைமட்டமாக சுரங்கப் பாதைக்குள் செலுத்துவதற்காக ஆகர் இயந்திரத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பாறைகள் குழிக்குள் விழுந்ததால் தொழிலாளர்கள் சிறிய காயங்களுக்கு ஆளாகினர். சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், ஆக்ஸிஜன், மின்சாரம் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

  • நவம்பர் - 15: முதல் துளையிடும் இயந்திரத்தால் திருப்தி அடையாத மிட்பு குழுவினர் அதிநவீன ஆஜர் இயந்திரத்தை கேட்டது. இதற்காக டெல்லியில் இருந்து வான் மார்க்கமாக  இயந்திரம் கொண்டு வரப்பட்டது. 

  • நவம்பர் - 16: புதிய டிரில்லிங் மிஷன் அசெம்பிள் செய்யப்பட்டு, நள்ளிரவிலும் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றன. 

  • நவம்பர் - 17: இயந்திரம் பிற்பகலில் 57 மீட்டர் நீளமுள்ள இடிபாடுகள் வழியாக சுமார் 24 மீட்டர் துளையிட்டு நான்கு குழாய்கள் செருகப்படுகின்றன. இருப்பினும், ஐந்தாவது குழாயை செருகும்போது ஒரு தடை ஏற்பட்டது. எனவே, மீட்புப் பணிகளில் உதவுவதற்காக மற்றொரு உயர் செயல்திறன் கொண்ட ஆகர் இயந்திரம் இந்தூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. மாலையில், சுரங்கப்பாதையில் பெரிய விரிசல் சத்தம் கேட்டது. இதனால் மீட்பு பணிகள் உடனடியாக நடவடிக்கை நிறுத்தப்பட்டன.

  • நவம்பர் - 18: சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிடுவது உட்பட ஐந்து வெளியேற்றும் திட்டங்களில் ஒரே நேரத்தில் பணியாற்ற, பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் ஆராய்ந்தனர்.  

  • நவம்பர் - 19: டிரில்லிங் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெரிய ஆகர் இயந்திரத்தின் உதவியுடன் கிடைமட்டமாக துளையிடுவதே சிறந்த திட்டமாக இருக்கும் என பரிந்துரை செய்தார்.

  • நவம்பர் - 20: சில்க்யாரா சுரங்கப்பாதையில் நடைபெறும் மீட்புப் பணிகள் தொடர்பாக,  முதலமைச்சர் தாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். 

  • நவம்பர் - 21: சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோவை மீட்புக்குழுவினர் வெளியிட்டனர். அவர்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்து, குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். சார் தாம் வழித்தடத்தில் கட்டுமானத்தில் இருக்கும் சுரங்கப்பாதையின் பால்கோட் முனையில் இரண்டு குண்டுவெடிப்புகள் அமைக்கப்பட்டன. இது சில்க்யாரா முனையிலிருந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான மாற்று திட்டமாகும்.

  • நவம்பர் - 22: 800 மிமீ விட்டம் கொண்ட எஃகு குழாய்களின் கிடைமட்ட துளையிடல் மூலம் சுமார் 45 மீட்டர் உள்ளே அனுப்பப்பட்டது.  சுமார் 57 மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் மட்டுமே மீதமிருந்தது. இருப்பினும், ஆகர் இயந்திரத்தின் மூலம் துளையிடும்போது சில இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால், துளையிடும் பணி தடைபட்டது.

  • நவம்பர் - 23: துளையிடும் பணியில் இடையூறாக இருந்து அந்த கம்பி 6 மணி நேர முயற்சிகளுக்குப்  பின் காலையில் அகற்றப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 48 மீட்டர் தூரம் துளையிடப்பட்ட நிலையில், இயந்திரம் நிறுத்தப்பட்டு இருந்த மேடையில் விரிசல் தோன்றியது. இதனால் பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டன.

  • நவம்பர் - 24: சில்க்யாரா சுரங்கப்பாதையில்12 நாட்களாக சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் நிறுத்தப்பட்டது. காரணம் ஆகர் இயந்திரம் துளையிடும்போது மீண்டும் ஒரு இரும்பு கம்பி இடையூறாக வந்தது.

  • நவம்பர் - 25:  சில்க்யாரா சுரங்கப்பாதையில் இடிபாடுகளை துளையிடும் பணிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் உடைந்தது.

  • நவம்பர் - 26: சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதைக்கு மேற்பகுதியில் இருந்து மீட்புப் பணியாளர்கள் துளையிடத் தொடங்கினர். அவர்கள் சுரங்கப்பாதையை அடைய 86 மீட்டர் கீழே துளையிட வேண்டி இருந்தது. மாலையில், கனரக துளையிடும் உபகரணங்கள் சுமார் 19.5 மீட்டர் வரை துளையிட்டன. 

  • நவம்பர் - 27: செங்குத்தாக துளையிடும் பணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்றது. 43 மீட்டர் ஆழம் வரையில் வெற்றிகரமாக துளையிடப்பட்டது.

  • நவம்பர்-28: தேவையற்ற இடையூறுகளை தவிர்க்கும் வகையில் இயந்திரம் இன்றி, மனித சக்தி மூலம் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் பணியாளர்கள் வெற்றிகரமாக மீட்டு வெளியே அழைத்துவரப்பட்டனர்.