மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது பெரிய பொக்கம்பட்டி எனும் கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவர்  பம்ப் இயக்கும் தொழில் செய்து வருகிறது. இவரது மனைவி பாண்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன் 100 நாள் வேலை திட்டப் பணிக்காக வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து வீட்டின்  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21,500 ரொக்க பணம் காணாமல் போனது தெரிய வந்தது.



 

நடந்த சம்பவம் குறித்து பாண்டியம்மாள் தனது கணவர் ராகவனிடம் தெரிவித்தார். ராகவன் சிந்துப் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை மனுவைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பட்டப்பகலில் கிராமத்திற்குள் வெளியாட்கள் புகுந்து கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவே உள்ளூர்காரர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராம பெரியவர்களிடமும் போலீசார் தெரிவித்துள்ளனர். பறிபோன நகைகளை மீட்பதற்கு கிராமத்தினர் வினோத முறையை கையாண்டனர்.



     
  

அதாவது ஒவ்வொரு வீடுகள் தோறும் காகித  உறையை அளித்து, யாராவது நகைகள் எடுத்திருந்தால் அந்த உறையினில் வைத்து விடுங்கள் என அறிவிப்பு செய்து, குறிப்பிட்ட நேரம் வரை இரவில் மின்சாரத்தை துண்டித்து, கிராமப் பள்ளியில் இரண்டு அண்டாக்களை வைத்து ஒவ்வொரு வீட்டாரும் தங்களது காகித உறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் அண்டாவில் போட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 



 

இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு கிராம பள்ளிக்கூட அறையில் இரண்டு அண்டாக்களை  வைத்து சென்றனர். பின்னர் கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் எரிய விடப்பட்டு அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்ததில்  திருடிய  நபர் நகைகளை கவரில் வைத்து அண்டாவிற்குள்  போட்டுச் சென்றது தெரிய வந்தது. நகைகளை எடுத்து பார்த்தபோது காணாமல் போன ராகவனின் நகைகள் என்பது தெரியவந்தது ஆனால் காணாமல் போன 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகைகள் மட்டுமே இருந்துள்ளது. ரொக்கப் பணம் ஏதுமில்லை. இதை தொடர்ந்து நகைகளை மீட்ட கிராம பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகைகளை மீட்ட போலீசார் காணாமல் போன நகைகளை ராகவனிடம் ஒப்படைத்தனர். நகைகளை மீட்க  ஊருக்கு நடுவில் அண்டா வைத்து பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சுவாரசியமான இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் கிராம மக்களை  வெகுவாக பாராட்டினர். 



 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது...,”மீதமுள்ள நகை மற்றும் பணம் கிடைக்க மீண்டும் இரவு  அண்டாக்களை வைத்து அனைத்து வீடுகளுக்கும் கவர் கொடுத்து மீதமுள்ள நகை பணத்தை மீட்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் அதே போல் அண்டாவை வைத்து நகையை மீட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.