இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மேம்படுத்தி மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 


'தாதா' கங்குலி:


கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் தாதா என அழைக்கப்பட்டவர் சவ்ரவ் கங்குலி. இந்திய அணியில் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். மிகவும் ஆக்ரோஷமான மற்றும் துடிப்பான வீரராக வலம் வந்த கங்குலி 50 வயதை கடந்தாலும் இன்றும் ரசிகர்களுக்கு “தாதா” தான். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  


பின்னர் 2019 ஆம் ஆண்டு  பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்ட அவர், கடந்தாண்டு அந்த பதவியை ராஜினாமா செய்தார். Century is Not Enough என்ற சுயசரிதைப் புத்தகத்தையும் கங்குலி எழுதியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி செயல்பட்டு வருகிறார். இதனிடையே கங்குலியின் பாதுகாப்புகென மேற்கு வங்க அரசு இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால் இந்த பாதுகாப்புக்கான காலக்கெடு நேற்றுடன் (மே 16) முடிவடைந்தது. 


இசட் பிரிவு பாதுகாப்பு:


இதனால் ஒய் பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு அது இசட் (z) பிரிவுக்கு  உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேற்கு வங்க மாநில அரசின் பிரதிநிதிகள் கங்குலி அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் லல்பசார் காவல் தலைமையகம் மற்றும் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். 


பாதுகாப்பு வளையம் உயர்த்தப்பட்டதன் மூலம் இனி கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் பயணப்பட்டு வருகிறார். அவர் மே 21 ஆம் தேதி கொல்கத்தாவுக்கு திரும்பியவுடன் இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 


இதுவரை மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி, ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மற்றும் தேசிய செயலாளர் அபிஷேக் பாண்டே ஆகியோர் இசட் பிளஸ் பாதுகாப்பை பெற்றுள்ளனர். அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் மோலோய் கட்டக் ஆகியோர் இசட் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சவ்ரவ் கங்குலியும் இணைந்துள்ளார். 


மேலும் படிக்க: IPL 2023: முட்டி மோதி கொள்ளும் 6 அணிகள்.. எந்த அணி பிளே ஆஃப்க்கு செல்லும்..? ஒரு அலசல்..!