ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் தேசிய டெங்கு தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேசிய டெங்கு தினத்தின் கருப்பொருள் "டெங்குவை எதிர்த்துப் போராடு, உயிர்களைக் காப்பாற்று" என்பதாகும். இந்த நாளில் நாம் டெங்குவை தடுக்க, அதன் மூலமான கொசுவை விரட்டுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


சிட்ரோனெல்லா


அத்தியாவசிய எண்ணெய் அல்லது ஜெல் அடிப்படையிலான ஃபார்முலா வடிவில் இருந்தாலும், சிம்போபோகன் குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிட்ரஸ் நறுமண மூலிகை ஒரு புகழ்பெற்ற இயற்கை பூச்சி விரட்டியாகும். இதனை உடலில் பூசிக்கொண்டால் 2-3 மணிநேரம் வரை பாதுகாக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கொசுக்கள் உட்பட அனைத்து வகையான பூச்சிகளிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த அத்தியாவசிய எண்ணெயை ஒரு பாட்டிலை எடுத்துக் கொள்ளலாம்.



துளசி


துளசியின் அற்புதமான பலன்கள் பல இருந்தாலும், இதனால் வெளிப்படும் இயற்கை நறுமணம் பூச்சிகள் மற்றும் கொசுக்களை விரட்டுகிறது என்பது கூடுதல் நன்மை. கென்யாவில் உள்ள மருத்துவ ஆய்வுகள், தொட்டியில் துளசி செடிகள் வைத்திருந்தால் 40% மலேரியாவை உண்டாக்கும் கொசுக்களைத் தவிர்க்கும் என்று கூறுகிறது. அதே வேளையில் துளசியில் செய்யப்பட்ட எண்ணெயை உடலில் தடவினால் 100% மஞ்சள் காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களைத் தடுக்கும் என்று கூறப்படுகின்றது.


தொடர்புடைய செய்திகள்: Thalapathy 68: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்..? 20 ஆண்டுகளுக்கு பிறகு தளபதியுடன் இணையும் யுவன்..? ரசிகர்கள் ஆர்வம்..!


யூகலிப்டஸ்


இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் கற்பூரம் போன்ற நறுமணத்திற்காக புகழ் பெற்ற யூகலிப்டஸ் மரத்தின் இலைகள் பல நன்மைகள் கொண்டுள்ளன. இது கொசுக்களை திறம்பட விரட்டுவது மட்டுமல்லாமல், சுவாச செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடல் வலியை நீக்குகிறது. கொசு விரட்டியாக CDC ஆல் அங்கீகரிக்கப்பட்ட யூகலிப்டஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையானது 3 மணி நேரம் வரை 95% வரை கொசுவில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.



வேம்பு


'ஆல்-ரவுண்டர்' என்று கருதப்படும், வேம்பு ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதன் வலுவான நறுமணம் காரணமாக, இது இயற்கை கொசு விரட்டியாகவும் சிறப்பாக செயல்படுகிறது. 2015 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, 20% வேப்பெண்ணெயின் செறிவு இரவில் 3 மணி நேரம் வரை 70% பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுகிறது. ஆனால் தோல் எரிச்சலைத் தவிர்க்க தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் அதை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.


பெப்பர்மின்ட் 


பயோஆக்டிவ் கூறுகளான லெமோனென் மற்றும் மெந்தோல் ஆகியவற்றின் ஆண்டிமைக்ரோபியல் தன்மை மிகப்பெரிய வரம். பெப்பர்மின்ட் தெளிவான சருமத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. 2011 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பெப்பர்மின்ட் எண்ணெய் கொசு லார்வாக்களுக்கு எதிராக செயல்படும் என்றும், மஞ்சள் காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களுக்கு எதிராக 2.5 மணி நேரம் வரை 100% பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறியது.