செங்கல்பட்டு விஷச் சாராயம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி (TN Spurious Liquor Death ) செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலை என்பவரை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இவர் வருவதற்கு முன்னதாக அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, விழுப்புரத்தில் 55 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். பார்க்கவே மனது கஷ்டமாக உள்ளது. தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிருடன் உள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல்
இது கடுமையான மன வேதனை அடைந்துள்ளது. அதிமுக, திமுக இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி, குற்றச்சாட்டு சொல்லுகின்றனர். திமுக கவுன்சிலரின் தம்பி தான் கள்ளச்சாரயத்தை விற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, முதல்வர் ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அத்தனை இடங்களிலும் கஞ்சா மது போதையால் சீரழிந்து வருகின்றனர். மதுவிலக்கு துறையை கையில் வைத்துள்ள செந்தில் பாலாஜி நவீன முறையில் புதிய மதுக்கடைகளை திறந்து வருகிறார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கொடுத்த பத்து லட்சம் உயிரை காப்பாற்றி விடுமா என கேள்வி எழுப்பினார்.
எல்லாம் கண்துடைப்பு நாடகம்
மேலும் பல குற்றவாளிகளுடன் காவல் துறை உடன் இருப்பதால் தான் இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது. தற்போது தமிழக முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்படுவதும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சீனே இருக்காது இது எல்லாம் கண்துடைப்பு நாடகம் என பேசினார். மேலும் தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அகற்ற வேண்டும் எனவும், கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது எத்தனை நாளைக்கு எனவும், கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது.
மலிவாக சாராயம்
தமிழகம் முழுவதும் மலிவாக எல்லா இடங்களிலும் சாராயம் கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு 2 வருடத்தில் 1900 கொலைகள் நடைபெற்றுள்ளது இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து நிவாரணம் நிதியாக கொடுத்துள்ளனர். அது தவறு கள்ளச்சாராயம் விற்றவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் வீடு நிலம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் .
அடிப்படை வசதிகளும் இல்லை
அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் தான் அதிக விதவைகள் உள்ளதாக கூறினார். ஆனால் இன்று அவர்களுடைய ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இப்போது விதவைகள் இல்லையா? என தூத்துக்குடி எம்.பி.கனிமொழிக்கு கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் எந்தவித குறைபாடும் இல்லை நன்றாக பார்த்து கொள்கிறார்கள் தற்போது ஏற்படும் உயிரிழப்புகள் கூட காலதாமதமாக மருத்துவமனைக்கு வந்தவர்கள் தான் எனவும், விழுப்புரத்தில் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு குடிக்க தண்ணீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என நோயாளிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.