ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் அணி மட்டுமே தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணியை தவிர மீதமுள்ள அனைத்து அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதிக்கு முட்டி மோதி வருகின்றன. 


நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு பிளே ஆஃப் நிலைமை சற்று தெளிவாகியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 


முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றதால், வருகின்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி இல்லையென்றால் சென்னை அணி, மற்ற அணிகளை நிலைமைகளை பொறுத்து காத்திருக்க வேண்டும். 




மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே உள்ளது., இதில் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும். இரண்டிலும் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக தகுதிபெறும். 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு லீக்கில் இரண்டு போட்டிகள் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே லக்னோவின் பிளேஆஃப்க்கு செல்லும். இதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால், லக்னோ அணி மற்ற அணிகளை சார்ந்திருக்க வேண்டும். 


தற்போது இருக்கும் நிலைமைகளை பார்த்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் பந்தயத்தில் உள்ளது. பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இதையடுத்து மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும்,  மற்ற அணிகளின் நிலைமை மற்றும் ரன் ரேட்டை பொறுத்து தெரிய வரும். 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றாலும் இவர்களின் நிலைமை சந்தேகம்தான். இதன்மூலம்,பிளேஆஃப் போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. 


பஞ்சாப் கிங்ஸ் அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. இவர்களுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளதால் இரண்டிலும் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் கதவை தட்ட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன.