வீரர்களை ஊக்கப்படுத்தும் போது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேரும். தொடர்ந்து வீரர்கள் விளையாட்டின் மீது ஆர்வத்தை செலுத்துவார்கள்

 

மூத்த விளையாட்டு வீரர்

 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (80). வடமதுரை, கன்னிவாடி, செந்துறை, நத்தம் என மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தால் மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் என்று வயது மூத்தோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்று முன்மாதிரி மூத்த வீரராக வளம் வந்து கொண்டிருக்கிறார். வட்டு எரிதல் (டிஸ்க் த்ரோ) போட்டி, உயரம் தாண்டுதல் போட்டி, போல்வால்டு உள்ளிட்ட தடகள போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து கவனம் ஈர்த்து வருகிறார்.

 

அரசு உதவி செய்ய கோரிக்கை

 

இது குறித்து சுப்ரமணி நம்மிடம் கூறுகையில்..., " மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் என்பது 35 வது மேல் உள்ள வீரர்களுக்கான விளையாட்டுப்போட்டி. ஒவ்வொரு 5 வயதிற்கும் வெவ்வேறு பிரிவில் போட்டி நடத்தப்படும் அதில் நான் தற்போது 80 முதல் 85வயதிற்கு உட்பட்டோரின் பிரிவில் விளையாடி வருகிறேன். தேசிய அளவிலும், ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளேன். தாய்லாந்தில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் உயரம் தாண்டுதலில் முதல் பரிசும், தட்டு எரிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றேன். தொடர்ந்து பின்லாந்தில் நடைபெறவிருந்த உலக அளவிலான போட்டியில் பங்கேற்க   தகுதி பெற்றேன். அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். கிட்டதட்ட ஒரு லட்சம் ருபாய் வரை கட்டினேன். ஆனால் என்னுடைய அக்கவுண்ட் போதிய டிரான்செக்சன் இல்லை என்று விசா கிடைக்கவில்லை. இது குறித்து முன் கூட்டியே தெரிந்திருந்தால் உலக போட்டியில் பங்கேற்றிருப்பேன். எனவே அரசு என்னை போன்ற மூத்தோர் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

 

விளையாட்டு வாழ்க்கையில் ஒளியேற்றும்

 

எங்களுக்கு பண உதவிகளையும், ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். சென்னையை சேர்ந்த அசோக் என்பவர் எனக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். ஆனால் எல்லாருக்கும் இது போல் உதவி கிடைக்காது. எனவே இதனை கவனத்தில் எடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு வீரர்களை ஊக்கப்படுத்தும் போது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேரும். தொடர்ந்து வீரர்கள் விளையாட்டின் மீது ஆர்வத்தை செலுத்துவார்கள். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது பல்வேறு பணியில் சிறந்து விளங்குகின்றனர். விளையாட்டு பலருக்கும் வாழ்க்கையில் ஒளியேற்றும். அதனால் அரசு தனி கவனம் செலுத்தி மூத்தோருக்கான விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்