சீன ஆக்கிரமிப்பு குறித்து கேட்பதற்கு மோடிக்கு தைரியம் கிடையாது, நாம் கேட்டால் ரெய்டு நடத்துவார்கள் எனவும், இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி பேசியுள்ளார்.

 

தேர்தல் திருவிழா 2024


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதிலும் சுயேட்சையாக களம் இறங்கும் நபர்கள் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு கேட்டு பெத்தானியாபுரத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். 

 

கனிமொழி பிரச்சாரம்


"பாரதிய ஜனதா கட்சி அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. நம்மை மதிப்பது கிடையாது. மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட தேசிய மருந்தியல் ஆய்வு நிறுவனத்திற்கு இதுவரை பணம் ஒதுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு போனதோடு சரி. இதுவரை என்னவானது என யாருக்கும் தெரியாது. பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் எல்லாம் ஒன்றிய அரசின் நிதியில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டு எய்ம்ஸ் மட்டும் ஜப்பானில் போய் காசு வாங்கிட்டு வந்து தான் கட்ட வேண்டுமாம். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு முனையமாக மாற்ற கோரி விடுத்த கோரிக்கையை இதுவரை செயல்படுத்தவில்லை. உபியில் ஒன்றும் கிடையாது, ஆனால் அங்கு பல பன்னாட்டு விமான நிலையங்களை அமைத்து தருகிறார்கள். 

 

இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல்


 

ஆட்சிக்கு வந்தால் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக மோடி வாக்குறுதி கொடுத்தார். அது குறித்து கேட்டால் பக்கோடா போட சொல்கிறார் அமித்ஷா. நாங்கள் பக்கோடா போடுவதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்? அருணாச்சலபிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து, பெயர் மாற்றமே செய்து விட்டது. இதை பற்றியெல்லாம் கேட்பதற்கு தைரியமோ, திராணியோ மோடிக்கு கிடையாது.

 

இதை நாம் கேட்டால் நம்மை நக்சல் என்பார்கள், ரெய்டு நடத்துவார்கள். போராடும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு ஆட்சி நடத்துகிறது பாஜக. தன்னுடைய தேர்தல் அரசியலுக்காக புல்வாமாவில் நம்முடைய வீரர்களை பலி கொடுத்தவர்களுக்கு நம் மீது என்ன அக்கறை இருக்க போகிறது? பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இது தான். ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரவேயில்லை.  இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என பேசினார்