இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மன்ஞ்ரேக்கர் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்த விமர்சனம் தொடர்பாக பலரும் எதிர் கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ட்விட்டரில் பலரும் அஸ்வினுக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக இந்த விமர்சனம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், அந்நியன் திரைப்படத்தில் வரும் வசனம் கொண்ட மீம்ஸை பதிவு செய்துள்ளார். அதாவது அந்நியன் படத்தில் விக்ரம் கூறும், "அப்படி சொல்லாத டா சாரி மனசு எல்லாம் வலிக்கரது" என்ற வசனத்தை கொண்ட மீம்ஸை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஒரு சில ஸ்மைலிகளையும் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தமிழ் தெரியாத ரசிகர்களுக்கு இது அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் ஆனா 'அப்ரஜித்' என்ற படத்தில் வரும் வசனம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக சஞ்சய் மன்ஞ்ரேக்கர், “அஸ்வின் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படவில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி ஆல் டைம் கிரேட் வீரராக இருக்க முடியும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட இடங்களில் ஒரு இன்னிங்ஸில் கூட அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தவில்லை” எனக் கூறியுள்ளார். இதற்கும் பலரும் எதிராக கருத்து பதிவிட்டு வந்தனர்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்,"“ஜோயல் கார்னர் என்ற சிறப்பான பந்துவீச்சாளர் எத்தனை போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவர் எடுத்தது என்னவோ மிகவும் குறைவு தான் ஆனால் அவருடைய பந்துவீச்சை ரெக்கார்டுகளைவிட சிறப்பாக அமைந்தது. ஏனென்றால் அவர் அப்போது சிறப்பான பந்துவீச்சு கொண்ட அணியில் இடம்பெற்று இருந்தார். அதேபோல் தான் தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சும். இதில் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குள் விக்கெட்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் தான் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
மேலும் வெளிநாட்டு தொடர்களுக்கு இந்தியா செல்லும் போது அனைத்து அணிகளும் அஸ்வினை எப்படி விளையாட வேண்டும் என்று திட்டத்தை வகுத்து விடுகின்றனர். இதனால் அவர் அங்கு சற்று தடுமாறுகிறார் தவிர அப்போதும் அவர் அங்கு சிறப்பாக தான் பந்துவீசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோரும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க: “தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..” அஸ்வினை வம்பிழுத்து வாங்கிக் கட்டும் மன்ஞ்ரேக்கர்!