சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மன்ஞ்ரேக்கர். ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான வீரர் இல்லை என அவர் தெரிவித்த கருத்து பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சூழலில் தற்போது அஸ்வின் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, “அஸ்வின் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படவில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி ஆல் டைம் கிரேட் வீரராக இருக்க முடியும். தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,நியூசிலாந்து உள்ளிட்ட இடங்களில் ஒரு இன்னிங்ஸில் கூட அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தவில்லை” எனக் கூறியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


 


இந்தச் சூழலில் அஸ்வினின் டெஸ்ட் தரவுகள் என்ன சொல்கிறது? அதை சற்று திரும்பி பார்ப்போம்.


2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் களமிறங்கினார். அப்போது முதல் இந்திய டெஸ்ட் அணியின் சிறப்பான சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் உருவெடுத்தார்.2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் இந்திய மண்ணில் 47 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் களம் கண்டுள்ளார். இவற்றில் 286 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் அதிவேகமாக சொந்த மண்ணில் 250 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரனுடன் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.




இந்திய மண்ணில் 42 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் இந்தச் சாதனையை படைத்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அஸ்வின் மீது எப்போதும் வெளிநாடுகளில் இவர் சிறப்பாக பந்துவீச வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.  ஆனால் அஸ்வினின் விக்கெட் தரவுகள் இதனை பொய்யாக்குகின்றன. ஏனென்றால் கடைசியாக முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடர் வரை வெளிநாடுகளில் அஸ்வின் 31 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அதில் அவர் 123 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு இவர் 4 விக்கெட் என்ற விகிதத்தில் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இது இந்தியாவின் சிறந்த சுழல் வீரர் அனில் கும்ப்ளேவைவிட சற்று அதிகமானது. அனில் கும்ப்ளே 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.




அதேபோல மற்றொரு முக்கியமான இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளிநாடுகளில் 48 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சுழல் ஜாம்பவான்கள் என்று கருதப்படும் பிஷன் சிங் பேடி மற்றும் பி.எஸ்.சந்திரசேகர் ஆகியோர் கூட வெளிநாடுகளில் அஸ்வினைவிட மிகவும் குறைவான விக்கெட் விகிதத்தை தான் வைத்துள்ளனர். 


அத்துடன் நியூசிலாந்து நாட்டில் அஸ்வின் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அங்கு அவருடைய சராசரி 33 ஆக உள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் அவர் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அங்கு அவருடைய சராசரி 46.14 ஆக உள்ளது. மேலும் இங்கிலாந்தில் 6 போட்டிகளில் 14 விக்கெட் வீழ்த்தி சராசரியாக 32.92 வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 8 போட்டிகளில் களமிறங்கி 32 விக்கெட் வீழ்த்தி சராசரியாக 42.78 வைத்துள்ளார். மொத்தமாக இந்த நாட்களில் அவர் 18 போட்டிகளில் 56 விக்கெட்களை 38.71 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 


இந்த தரவுகளையும் வைத்து பார்க்கும் போது இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே இந்த 4 நாடுகளில் 35 போட்டிகளில் பங்கேற்று 141 விக்கெட்களை 37.04 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சையும் அஸ்வினின் சராசரியும் கிட்டதட்ட மிகவும் அருகே தான் உள்ளது. அஸ்வின் அந்த நாடுகளில் 5 விக்கெட் வீழ்த்த வில்லை என்பதற்காக அவர் அங்கு சிறப்பாக செயல்படவில்லை என்று கருத முடியாது. 




இதே கருத்தை தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஐயன் சேப்பல், “ஜோயல் கார்னர் என்ற சிறப்பான பந்துவீச்சாளர் எத்தனை போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவர் எடுத்தது என்னவோ மிகவும் குறைவு தான் ஆனால் அவருடைய பந்துவீச்சை ரெக்கார்டுகளைவிட சிறப்பாக அமைந்தது. ஏனென்றால் அவர் அப்போது சிறப்பான பந்துவீச்சு கொண்ட அணியில் இடம்பெற்று இருந்தார். அதேபோல் தான் தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சும். இதில் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குள் விக்கெட்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் தான் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 


மேலும் வெளிநாட்டு தொடர்களுக்கு இந்தியா செல்லும் போது அனைத்து அணிகளும் அஸ்வினை எப்படி விளையாட வேண்டும் என்று திட்டத்தை வகுத்து விடுகின்றனர். இதனால் அவர் அங்கு சற்று தடுமாறுகிறார் தவிர அப்போதும் அவர் அங்கு சிறப்பாக தான் பந்துவீசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது புதிதல்ல. இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் கும்ப்ளேவை எடுக்க இந்திய தேர்வுக்குழு தயங்கி உள்ளது. அப்போது இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி அனில் கும்ப்ளே இல்லையென்றால் இந்த அணியின் தேர்வு பக்கத்தில் நான் கையொப்பம் இடம் மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பின்னர் தான் தேர்வுக்குழுவின் கும்ப்ளேவை தேர்வு செய்தனர். அந்தத் தொடரில் அனில் கும்ப்ளே 24 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். 




அதேபோல் தற்போது அஸ்வின் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அவர் தனது பந்துவீச்சு மூலம் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள். இந்தப் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அஸ்வின் அசத்துவார் என்று எதிர்பார்ப்போம். தற்போது அஸ்வின் 409 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அஸ்வின் இந்த 6 போட்டிகளிலும் சேர்த்து 25 விக்கெட்களுக்கு மேல் எடுத்தால் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கும்ப்ளேவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிக்கலாம். அதையும் இந்த தொடர்களில் அஸ்வின் செய்வார் என்று எதிர்பார்ப்போம். 


மேலும் படிக்க: 8 வருடத்துக்கு முன் போட்ட ட்விட்; 7 மாசம் சஸ்பென்டான இங்கிலாந்து பவுலர்!