உடலுக்கு முன் வரும் தொப்பை, ஆடமுடியாத அளவிற்கு எடை என்கிற விமர்சனம் நடிகர் அஜித் மீது உச்சத்தில் இருந்த சமயம் அது. அந்த நேரத்தில் தான் சிட்டிசன் என்கிற படம் வருகிறது, அஜித் பல வேடங்களில் நடிக்கிறார் என்கிற விளம்பரம் வெளியானது. தல-தளபதி கோஷ்டிகள் சண்டைகள் உச்சத்தில் இருந்த சமயம் அது. இந்த உடம்பை வைத்து பல வேடங்களா என கிண்டலடித்தனர் ஒரு தரப்பினர். அஜித், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். விமர்சனங்களை சவாலாக எடுப்பவர். அப்படி எடுத்து வெளியானது தான் சிட்டிசன். 2001ம் ஆண்டு இதே நாளான ஜூன் 8 ல் உலகளாவிய வெளியீடானது சிட்டிசன். அறிவானந்தம், அப்துல்லா, அந்தோனி, சிட்டிசன், சுப்பிரமணி என அஜித்திற்கு ஏகத்திற்கும் வேடங்கள் அந்த படத்தில்.
அல்டிமேட் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு தியேட்டர் அதிர்ந்தது!
நிக் ஆட்ஸ் டைட்டில் போட்டாலே அஜித் வந்ததைப் போல கொண்டாடுவார்கள் அப்போது. இப்போதும் என் கண்ணில் நிழலாடுகிறது, மதுரை அபிராமி தியேட்டரில் ஓப்பனிங் காட்சிக்காக காந்திருந்ததும், ரசிகர்கள் காமராஜர் சாலை வரை கால்கடுக்க நின்றதும். ‛அல்டிமேட் ஸ்டார்’ என்கிற பட்டத்துடன் அஜித் பெயர் திரையில் வரும் போது, தியேட்டர் அதிர்ந்தது. ‛ஐ லக் யூ...’ பாடலுடன் ஜாலியாக தொடங்கும் கதை, அதன் பின் முழுவதும் பரபரப்பாய் பயணிக்கும். ஒரு இளைஞன் தனி மனிதனாக உயர் அதிகாரிகளை கடத்துகிறான். அவனுக்கு சிலர் பின்னால் இருந்து உதவுகிறார்கள். கடத்தப்பட்டவர்களை கொலை செய்ததற்காக நீதிபதி முன் நிறுத்தப்படும் அந்த இளைஞன், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான். அழிக்கப்பட்ட அத்திப்பட்டி என்கிற கிராமத்தின் ஒரே ஒரு எச்சம், தான் என்றும், அந்த கிராமம் அழிய காரணமானவர்கள் தான் கடத்தப்பட்டார்கள் என்கிறான். இறுதியில் அவர்கள் கொலை செய்யப்படவில்லை என்பதையும், ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதாடி, வெற்றியும் பெறும் கதை தான் சிட்டிசன்.
அடித்து உடைத்த அஜித்!
எதையெல்லாம் குறையாக முன்பு சொன்னார்களாே.. அதையெல்லாம் முறியடித்து அசத்தியிருப்பார் அஜித். குறிப்பாக அத்திப்பட்டி சுப்பிரமணியாக வரும் போது, மீனவ வேடத்தில் வெளுத்து வாங்கியிருப்பார். ‛ஏலே.... கலெக்டரு....’ என, கொதிக்கும் போதும் சரி, ‛ஐயா... இங்கேயும் கொஞ்சம் மனுசங்க இருக்கோம்ங்கய்யா...’ என, வேண்டும் போதும் சரி, அஜித், சுப்பிரமணியாக ஆகியிருப்பார். இயக்குனர் சரவணன் சுப்பையா, ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாகவே நகர்த்தியிருப்பார். கிட்டதட்ட 3 மணி நேரத்தை நெருங்கும் படம். ஆனால் சலிப்பு தட்டாத அளவிற்கு கதை நகர்த்தப்பட்டிருக்கும். ஆக்ஷன் படத்தை சஸ்பென்ஸ் கலந்து கடத்தியிருப்பார்கள். சிட்டிசன் என்கிற ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நகரும் கதை, ஹீரோயின் தேவையில்லை. ஆனாலும் வசுந்தராதாஸை இறக்கி இளசுகளை உசுப்பிவிட்டிருப்பார்கள். பாடகி என்பதால் அவரது டூயட்டுகளை அவரே பாடியிருப்பார். ‛பூக்காரா.. பூக்காா...’ பாடல் அந்த நேரத்தில் எங்கு பார்த்தாலும் ஒலிக்கும். மீனவ அஜித்திற்கு ஜோடியாக மீனா. சிபிஐ அதிகாரியாக நக்மா என கதாநாயகிகள் படடாளமும் படையெடுத்து நிற்கும். பாண்டியன், நிழல்கள் ரவி, அஜய் ரெத்தினம், தேவன் என இன்னும் துணை நடிகர்கள் வட்டம் விரியும். அத்தனை பேர் இருந்தாலும், அஜித் என்கிற ஒற்றை மனிதரை சுற்றி தான் படம் இருக்கும். உண்மையில் அது அஜித் படம் தான்!
எத்தனை வேடம்? இப்போது வரை கணக்கு தெரியாது!
கதாபாத்திரங்கள் என எண்ணும் போது அஜித்திற்கு இரு வேடங்கள். ஆனால் கடத்தலுக்காக அவர் போடும் வேடங்கள். எண்ணில் அடங்காதது. ஒருகாட்சியில் கலெக்டரை கடத்த வேண்டியிருக்கும். அப்போது அங்கு அஜித் மாறுவேடத்தில் வரப்போகிறார் என்பது தெரியும். எப்படி வரப்போகிறார் என்கிற பரபரப்பு இருக்கும். ஒருவர் டீ எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் செல்வார். அவர் தான் அஜித் என அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது அஜித் இல்லை. இப்படி, வரக்கூடிய காட்சிகளில் எல்லாம், ‛இது அஜித்தா இருக்குமோ...’ என படம் பார்ப்பவர்கள் அவர்களுக்கும் கேட்டுக் கொண்டே இருக்கும் அளவிற்கு, மேக்கப்களை அள்ளி அணிந்திருப்பார். இப்போது வரை சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு எத்தனை வேடம் என்பதற்கு சரியான எண்ணிக்கை இருக்காது. நீங்களும் முடிந்தால் கவுண்ட் பண்ணி பாருங்க. ஏதாவது ஒன்றை மிஸ் செய்து விடுவீர்கள்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமானவை!
சிட்டிசனில் எந்த கதாபாத்திரமும் கதையை விட்டு விலகாது. ‛கில்பர்ட்... நாயர்... ’ என எந்நேரமும் துப்பாக்கியில் வரும் நக்மாவாக இருக்கட்டும், சொட்ட சொட்ட ஜொல்லு விடும் இந்துவாக வசுந்தரதாஸாகட்டும், பெற்ற குழந்தை கடலில் மூழ்கும் போது தன் மூச்சைக் கொடுத்து உயிர் விடும் செவுலி மீனாவாகட்டும், ‛நீ ஜெயிக்கனும்...’ என உயிர் விடும் வாப்பா பாண்டியனாகட்டும் சிட்டிசன் படத்தின் உண்மையான சிட்டிசன்கள். 20 ஆண்டுகளுக்கு முன் 20 கோடியில் எடுக்கப்பட்ட படம் வசூல் அள்ளிய படம். அஜித் ரசிகர்களை குதூகலிக்க வைத்த படம் என சிட்டிசன் அஜித் வாழ்வில் மறக்க முடியாத படம். ரசிகர் மன்றங்களை அன்று அஜித் நிர்வகித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அஜித் விடுதலையாகும் போது, வெளியே அவரை பெருங்கூட்டம் வரவேற்கும். அதற்கு ரசிகர்களை பயன்படுத்தியிருப்பார்கள். அதை தவிர வேறு எந்த படத்திலும் அஜித், தனது ரசிகர்களை பயன்படுத்தியாக தெரியவில்லை.
அஜித் இமேஜை உயர்த்திய சிட்டிசன்!
ஒரு ஹீரோ, பழிவாங்குவாரு, கடைசியில் ஜெயிப்பாரு. இது வழக்கமான கதை தானே. ஆனால் சிட்டிசன் அதை கடந்து வேறு ரகம். அஜித் நேரடியாக அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கேள்வி கேட்டிருப்பார். மக்களையும் கேள்வி கேட்க வைத்திருப்பார். ஊழல் வாதிகளை உள்நாட்டிலேயே அகதிகளாக்க வேண்டும் என்கிற புதிய சித்தாந்தத்தை சொல்லியிருப்பார். இது பலருக்கும் பாடமாக இருக்கவேண்டும் என வெடித்திருப்பார். ஒரு வழக்கறிஞர் எப்படி சிந்தித்து செயல்படலாம் என்பதை காட்டியிருப்பார். அல்டிமேட் ஸ்டார் என்கிற தனது பட்டத்திற்கு சிட்டிசன் பெரிய அங்கீகாரம் தந்ததை அப்போதே உணர்ந்தார் அஜித். அஜித் பறந்து பறந்த அடிக்கும் காட்சிகள் அப்போதே விமர்சனம் செய்யப்பட்டன. ஆனால், அஜித் பறக்கலாம் என்கிற உணர்வை ரசிகர்களுக்கு விதைக்க வைத்தது அந்த கதாபாத்திரம். இப்படி தான் கொண்டாடப்பட்டது சிட்டிசன். இன்று 20 ஆண்டுகளை கடந்தாலும், ஒவ்வொரு சேனலிலும் மாதத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது சிட்டிசன் ஒளிப்பரப்பாகும். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களில் சிட்டிசன் இடம் பெற்றதால் தான் 20 ஆண்டுகளுக்கு பிறகும் அது பேசப்படுகிறது. இசையும், பின்னணியிலும் படத்தை இன்னும் சுமந்திருப்பார் தேவா. ‛நான் தனியாளில்ல...’ என அஜித் கூறும் வசனம், இன்று அவர் பின்னால் அணிவகுத்து நிற்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை மனதில் வைத்து அன்றே கூறப்பட்டது.
படத்தில் பணியாற்றியவர்கள்!
இயக்குனர்- சரவணன் சுப்பையா
தயாரிப்பு: நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி
கதை: சுஜாதா
வசனம்: பாலகுமாரன்
இசை: தேவா
மேலும் படிக்க:
20 years of Citizen: அத்திப்பட்டி சுப்பிரமணியும்... அப்துல்லா அந்தோணியும்!