அஜா்பைஜானில் நடைபெறும், FIDE உலகக் கோப்பையில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வெளியேற்றியதன் மூலம் இந்தியாவின் பிரக்ஞானந்தா கடைசி 16க்கு முன்னேறினார்.


பிறந்தநாள் அன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா


தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் முன்னணி செஸ் வீரரான ஹிகாரு நகமுராவை  2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். புதன் மற்றும் வியாழன் அன்று நடந்த நான்காவது சுற்று சந்திப்பில் இருவரும் போட்டியிட்ட நிலையில் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின்  காலிறுதிக்கு முந்தைய சுற்றான கடைசி 16க்கு அவர் முன்னேறினார். இதனால் பிரக்ஞானந்தா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியில் இரண்டாவது நாளான வியாழன் அன்று பிறந்தநாள் கண்ட பிரக்ஞானந்தா 18 வயதை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட்


“பிரக்ஞானந்தா நன்றாக ஆடுகிறார்! போட்டிக்கு முன் ஆதிக்கம் நிறைந்த ஒருவராக இருந்த ஹிகாரு நகமுராவை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உண்மையிலேயே கவரும் வகையிலான ஆட்டம், பிரகி!” என்று இந்திய செஸ் ஐகான் விஸ்வநாதன் ஆனந்த் போட்டிக்குப் பிறகு ட்வீட் செய்தார்.






வெளியேற்றப்பட்ட மற்ற இந்தியர்கள்


இதற்கிடையில், இந்த FIDE உலகக்கோப்பையில் இயன் நெபோம்னியாச்சி, இந்திய இளம் வீரர் நிஹால் சரினுக்கு எதிரான இரண்டு டைபிரேக் கேம்களிலும் வெற்றி பெற்று கடைசி 16க்குள் நுழைந்தார். இந்திய  வீரர் வெளியேற்றப்பட்டார். இந்தியாவின் விதித் குஜ்ராத்தி மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் ஏற்கனவே கடந்த வியாழனன்று வெளியேறி இருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI 4th T20: தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள்..? சவால் அளிக்குமா இந்தியா..? இன்று 4வது டி20 மோதல்..!


வென்ற இந்திய வீரர்கள்


மற்றொரு இந்திய இளைஞரான குகேஷ், ஆண்ட்ரி எசிபென்கோவை தோற்கடித்து கடைசி 16-க்குள் நுழைந்தார். அனிஷ் கிரியை வீழ்தியதைத் தொடர்ந்து மற்றொரு வலுவான டைபிரேக் ஆட்டத்தில், இந்திய வீரர் நிஜாத் அபாசோவ், இந்த முறை பீட்டர் ஸ்விட்லருக்கு எதிராக வென்று கடைசி 16க்குள் தனது இடத்தையும் பதிவு செய்தார். இதனால் தற்போது மொத்தம் 3 இந்திய வீரர்கள் கடைசி 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 






சில வாரங்கள் முன்பு வென்ற சாம்பியன் பட்டம்


சில வாரங்களுக்கு முன்பு பிரக்ஞானந்தா, வி கெசா ஹெடெனி மெமோரியல் சூப்பர் செஸ் போட்டி 2023 இல் சாம்பியனானார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதான பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளைப் பெற்று 10 வீரர்கள் பங்கேற்கும் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார். ஒன்பது சுற்று ஆட்டத்திற்குப் பிறகு, அவர் எம் அமீன் தபடாபாய் (ஈரான்) மற்றும் ரஷ்யாவின் சனன் ஸ்ஜுகிரோவ் ஆகியோரை விட ஒரு புள்ளி அதிகமாக பெற்று முன்னேறினார். பிரக்ஞானந்தா அதில் ஐந்து வெற்றிகளைப் பதிவுசெய்தார், மூன்று ஆட்டங்களை சமன் செய்தார் மற்றும் ஐந்தாவது சுற்றில் அமீன் தபடபாயிடம் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்றார். இறுதிச் சுற்றில், அவர் போலந்து கிராண்ட்மாஸ்டர் ராடோஸ்லாவ் வோஜ்தாஸ்ஸெக்கிற்கு எதிராக வெள்ளைக் காய்கள் வைத்து ஆடி, டிரா செய்ததால் வெற்றி பெற்றார்.