திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, தனது குடும்பத்தினரை ஏமாற்றி ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சின்மயி குடும்பத்தினரிடம் பண மோசடி


தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழி திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளவர் பாடகி சின்மயி. மிகவும் பிரபலமான பாடகியான இவர் குடும்பத்தினரிடம் ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தனது குடும்பத்தாரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்



OTP எண் பகிராமலே எடுத்துள்ளனர்


ஓடிபி எண்ணை பகிர்ந்து கொள்ளாமலேயே இந்த மோசடி நடந்துள்ளதாகவும், செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது வங்கி கணக்கில் இருந்த பணம் முழுவதும் மாயமானதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய சின்மயி, முதியவர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI 4th T20: தொடரை வெல்லுமா மேற்கிந்திய தீவுகள்..? சவால் அளிக்குமா இந்தியா..? இன்று 4வது டி20 மோதல்..!


விழிப்புணர்வுக்காக பதிவு


குறிப்பாக இந்த பதிவை அவர் வேறு யாரும் இது போல பாதிக்கப்படாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பதிவாக வெளியிட்டுள்ளார். ”இது மோசடிக்காரர்கள் எங்கள் ஃபோனை தானே ஆபரேட் செய்வதைப்போல கொடுமையானது.  மேலும் அவரவர் குடும்பங்களில் உள்ள பெரியவர்களிடம் இது போன்ற மெசேஜ் வந்தால் திறக்க வேண்டாம் என்று கூறி எச்சரிக்கையுடன் இருக்க- சொல்லுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.






சின்மயி சமூக வலைதள பதிவு


"போலியான TNEB-பில் கட்டணம் மூலம் ஸ்கேம் எப்படி செய்யப்படுகிறது என்பதை உணர்கிறோம். எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்தவரின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மொத்தமும் எடுக்கப்பட்டுள்ளது. OTP பகிராமலே அதனை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது மிகக் கொடுமையானது. கிட்டத்தட்ட அவர்கள் நம் போனை பார்ப்பது போலவே இருக்கிறது. ஒரு லிங்க் வந்தது, கிளிக் செய்ததும், முடிந்தது. பணம் எடுக்கப்பட்டுவிட்டது. உங்கள் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு முதியவருக்கும் இதனை தெரியப்படுத்தவும், அவர்களைப் பாதுகாக்கவும்," என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.